மன சமநிலை இழந்தேன்! – ஜட்ஸ் கர்ணன் தன்னிலை விளக்கம்!
சென்னை ஹைகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனை கொல்கத்தா ஹைகோர்ட்டுக்கு இட மாற்றம் செய்வது தொடர் பாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கடந்த 12–ந்தேதி கருத்துரு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த கருத்துருவை தாமாக முன்வந்து வழக்கு ஆக்கிய சி.எஸ்.கர்ணன், அதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி சி.எஸ். கர்ணனின் உத்தரவு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் (தலைமை நீதிபதியின் நேர்முக உதவியாளர்) ஒரு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி கள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.பானுமதி ஆகியோர் கர்ணனின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் அவருக்கு எந்த நீதித்துறை பணியையும் வழங்கக்கூடாது என ஆணையிட்டனர்.மேலும், சென்னை ஹைகோர்ட்டில் இருந்து நீதிபதி சி.எஸ்.கர்ணன் மாற்றப்பட்டதாக 12–ந்தேதியன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு பிறகு (சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியால் பிரத்யேகமாக ஏதாவது பணியை வழங்கினால் ஒழிய), அவர் நிர்வாக ரீதியாக அல்லது நீதித்துறை ரீதியாக ஏதாவது உத்தரவுகள் பிறப்பித்து இருந்தால் அந்த உத்தரவுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.பானுமதி ஆகியோருக்கு நீதிபதி சி.எஸ்.கர்ணன் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில் அவர் பல்வேறு சம்பவங்களில் சில நீதி பதிகளால் ஏளனத்துக்கு ஆளானதால், மனதளவில் பாதிக்கப்பட்டு, விரக்தி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். தன் கடிதத்தில் அவர் அவர்,‘‘சக நீதிபதிகளின் ஏளனம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தாழ்த்தப் பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருந்தேன். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது.அதைத் தொடர்ந்து,நீதிபதிகள் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தப் பட்டேன். ஆனால், எனக்கு நீதி வேண்டும் என்பதில் உறுதியாகச் செயல்பட்டேன். இதனால் பல அவமானங்களை நான் சந்திக்க நேர்ந்தது.இவற்றாலும் எனக்கு ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களினால் வேதனை அடைந்தேன். அதன் காரணமாக மன சமநிலை இழந்தேன். அதன் விளைவாகவே 15–ந்தேதி தவறான உத்தரவு பிறப்பித்தேன்’’என கூறி உள்ளார்.
தனது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில், தான் தொல்லைக்குள்ளும், ஏளனத்துக்கும் ஆளான இரு சம்பவங்கள் குறித்து அவர் விவரித்துள்ளார். இது தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருக்கும், பிற உயர் பிரமுகர்களுக்கும் கடிதம் எழுதியதாகவும் கூறி உள்ளார்.
மேலும், ‘‘அது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதுடன், அத்தகைய அசிங்கமான சேட்டைகளில் ஈடுபட்ட நீதிபதிகளின் பெயர்களை கூறுமாறு என்னை வலியுறுத்தவும் செய்தன. ஆனால் நீதித்துறையின் புனிதத்தை காப்பதற்கும், சமூக நல்லிணக்கத்தை காப்பதற்கும் நான் அவ்வாறு செய்ய மறுத்து விட்டேன்’’ எனவும் குறிப்பிட் டுள்ளார். இறுதியாக, ‘‘நான் இன்னும் அனைவருடனும் நல்லிணக்க அணுகுமுறையைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் இதை கருணையுடன் ஏற்று, உதவ வேண்டுகிறேன்’’ என கூறி உள்ளார்.


