‘போராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா?’- உதயகுமாரன் கடிதம்
“தமிழகத்தின் “ஆபத்தான ஆறு” கட்சிகளும் எங்கள் மக்களையும், போராட்டத்தையும் புறக்கணித்த நிலையில், “ஆதரவான நூறு” இயக்கங்கள் கைகொடுத்து உதவின. ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின், அவற்றின் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவர்களும் “ஆபத்தான ஆறு” பேரோடு கைகோர்த்துக் கொண்டு, எங்களை கைவிட்டுவிடும் நிலை காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகள் எங்களைத் தொடர்ந்து ஆதரித்தாலும், எங்கள் நிலை பலவீனமாகவே இருக்கிறது” என்று சுப. உதயகுமாரன் ஒரு கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய ஒரு கடித்தத்தில்,”தரமற்ற உபகரணங்களுடனும், பல்வேறுக் குளறுபடிகளுடனும் கட்டப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக துவக்கக் காலத்திலிருந்தேப் போராடி வருகிறோம். கடந்த 2011 செப்டெம்பர் முதல், இன்றோடு 878 நாட்களாக, ஓர் உச்சகட்ட போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மக்களுக்கான வெற்றி ஒன்றைத் தவிர வேறு எந்த குறிக்கோள்களும், எதிர்பார்ப்புக்களும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான எனக்கோ, அல்லது குழு நண்பர்களுக்கோ இருந்ததில்லை. பதவிகளையோ, பட்டங்களையோ, பணத்தையோ, பரிசுகளையோ எதிர்பார்த்து நாங்கள் இங்கே இடிந்தகரைக்கு வரவில்லை.
சுமார் இரண்டரை ஆண்டுகளாக மனைவியின் அரவணைப்பின்றி, குழந்தைகளின் குதூகலமின்றி, பெற்றோரின் பாசமின்றி, நாங்கள் வசித்திருந்த வீடுகளின் சுகங்களின்றி பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். தேசத் துரோகிகள், அமெரிக்கக் கைக்கூலிகள், தீவிரவாதிகள், கோடி கோடியாக பணம் பெறுகிறவர்கள் என்றெல்லாம் பல்வேறு அவதூறுகளை, கடுகளவும் உண்மையற்றக் குற்றச்சாட்டுக்களை சுமந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்வில் இழந்தவற்றை திரும்பப் பெறுவதே கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், எங்கள் மீது 360க்கும் அதிகமான கொடும் வழக்குகளை பொய்யாக சுமத்தி, எங்களைக் கைது செய்து, சிறையில் அடைக்க செல்வி. ஜெயலலிதா அவர்களின் அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களுக்கு எந்தத் தகவலும் கொடுக்காது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டுக் கொடுத்து, அமெரிக்கர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒருதலைப்பட்சமான இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை கொல்லைப்புறம் வழியாகக் கொண்டுவந்தார் மன்மோகன் சிங். அதுதான் தனது பத்தாண்டு கால ஆட்சியின் மகத்தான சாதனை என்று சொல்லும் பிரதமர் எங்களை அமெரிக்கக் கைக்கூலி என்று குற்றம் சுமத்துகிறார்.
நானோ, நண்பர்களோ அரசியலில் குதிப்பதற்காக இங்கே வரவில்லை. பிறர் மீது ஆளுமை செலுத்தித்தான் என்னைப் பற்றி நன்றாக உணர முடியும் என்று நினைக்கிறவனல்ல நான். பெண்களை சதைப் பிண்டங்களாக பார்க்கிறவனல்ல. பணத்தைப் பொறுத்தவரை, “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்று நினைக்கிறவன். மண் சொத்தைவிட மனிதச் சொத்தேப் பெரிதானது என்று வாழ்கிறவன். எனவேதான் எனக்கு சாதியும், மதமும், ஊரும், தொழிலும் ஒரு பொருட்டாக இருக்கவேயில்லை. “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” எனும் கதவொட்டிகளை ஒட்டித் திரிந்த குழந்தைப் பருவம் முதல் பொது வாழ்வில் ஈடுபாடு இருந்தாலும், இப்போதிருப்பது போன்று குடும்பத்தையே விட்டுவிட்டு, 24 மணி நேரமும் சந்திப்புக்களும், கூட்டங்களும், நெருக்கடியும், மன அழுத்தமுமாக வாழ விரும்பியதில்லை.
இந்த வாழ்க்கை முறையை சாவது வரை ஏற்றுக் கொள், சம்பளமாக நிறைய அவதூறுகளும், அசிங்கங்களும், அருவருப்புக்களும், அடக்குமுறைகளும் அள்ளித் தருவோம் என்று பலர் வலியுறுத்தும்போது, திகைத்து நிற்கிறேன். பகட்டுக்களும், படாடோபங்களும், அதிரடிகளும், ஆரவாரங்களும் பிடிக்காத நான் இவை மட்டுமே நிரம்பியிருக்கும் அரசியல் களத்தில் எப்படி தாக்குப் பிடிப்பேன் என்று சிந்திக்கிறேன். சிறு தகுதிகளும், திறமைகளும் மட்டுமே கொண்ட என்னை, தேவதூதனாக சிலர் பார்க்கும்போது, பேசும்போது உண்மையிலேயே உள்ளுக்குள் அஞ்சுகிறேன், படபடப்படைகிறேன்.
தமிழகத்தின் “ஆபத்தான ஆறு” கட்சிகளும் எங்கள் மக்களையும், போராட்டத்தையும் புறக்கணித்த நிலையில், “ஆதரவான நூறு” இயக்கங்கள் கைகொடுத்து உதவின. ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின், அவற்றின் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவர்களும் “ஆபத்தான ஆறு” பேரோடு கைகோர்த்துக் கொண்டு, எங்களை கைவிட்டுவிடும் நிலை காணப்படுகிறது. தேர்தலில் போட்டியிடாத சில கட்சிகள் எங்களைத் தொடர்ந்து ஆதரித்தாலும், எங்கள் நிலை பலவீனமாகவே இருக்கிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு, சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற இடது சாரிக் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். மக்கள் அதிகமாக, அடர்த்தியாக வாழும் நமது நாட்டுக்கு அணுசக்தி ஏற்றதல்ல; கூடங்குளம் அணுமின் நிலையம் ஊழலும், கோளாறும் மிகுந்தது என்பதால் அதையும் மூடுவதற்கு உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டோம். இன்றுவரை யாரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் எங்கள் போராட்டத்தின் அடுத்தக் கட்டம் பற்றிய முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். “நாற்பதும் வேண்டும்” என்று நாயாக அலையும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் மக்களை அழிக்கும் ஆபத்தான திட்டங்களை நிறுத்த முயற்சிக்கவில்லை. தமக்கு பதவி உயர்வும், பணமும், குடும்பத்துக்கு அதிகாரமும் வேண்டி நிற்கும் அரசியல்வாதிகள், தமிழருக்கு வேண்டியதை செய்து கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலும், பிரசாந்த் பூஷனும் எங்களுக்கு “காலத்தினாற் செய்த” நன்றிகளை மனதிற் கொண்டு, அணுசக்திக்கு எதிராக நிற்கும் அவர்களின் கரங்களை பலப்படுத்துவதுதான் சிறந்ததாக இருக்கும் என்று சிலர் அறிவுரைக்கிறார்கள். எங்கள் போராட்டத்தை அரசியல் தளத்துக்குக் கொண்டு போவதுதான், ஒரே வழி என்பது அவர்கள் வாதம்.
பெருந்தலைவர் காமராசர் பக்தர்களான தாத்தா, பாட்டி, அம்மா, மற்றும் தி.மு.க. வெறியரான அப்பா மத்தியில் பிறந்தவன் நான். குடியரசு, விடுதலை, உண்மை, திராவிட நாடு, காஞ்சி போன்ற திராவிட அரசியல் இதழ்கள் படித்து வளர்ந்தவன். கம்யூனிஸ்ட் அமைப்புத்தான் அற்புதமானது என்று கனவுகண்டு, 1981 முதல் 1987 வரை எத்தியோப்பியாவில் மெங்கிஸ்து ஹைலமரியம் என்பவரின் சர்வாதிகார ஸ்டாலினிஸ்ட் ஆட்சியைப் பார்த்து, மனம் மாறியவன். கம்யூனிஸ்ட் சாயம் வெளுத்துப் போனதால், நான் ஒரு காந்தீய சோஷலிஸ்ட் என்று என்னை கருதத் துவங்கினேன்.
1990 முதல் 1996 வரை கடினமாகப் படித்து அரசியலில் முனைவர் பட்டம் பெற்றேன். இந்துத்துவா அமைப்புக்கள் எப்படி இந்திய தேசிய வரலாற்றை தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி எழுதுகிறார்கள் என்பது குறித்துத்தான் நான் ஆய்வு செய்தேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஹெச்.வி. சேஷாத்ரி அந்த இயக்கத்தின் “ஆர்கனைசர்” பத்திரிகையில் 1987-ஆம் ஆண்டு பெப்ருவரி-மார்ச் மாதங்களில் எழுதிய ஒரு கட்டுரைத் தொடர் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் அன்னா ஹசாரே நிறுவியிருந்த “இராமராஜ்யம்” பற்றிய கட்டுரைகள் அவை.
அந்த “உன்னத” சமூகத்தின் அடிப்படையே ஊருக்கு நடுவேக் கட்டப்பட்டிருந்த கோவில்தான் என்றார் ஹசாரே. கோவிலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் கொடுத்தீர்கள் என்று சேஷாத்ரி கேட்டதற்கு ஹசாரே ஓர் அனுபவத்தைச் சொன்னார். எங்கள் கிராமத்துக்கு வந்த ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி 90,000 ரூபாயை வைத்து பள்ளிக்கூடத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு பதிலாக, இப்படி கோவிலைக் கட்டியிருக்கிறீர்களே என்று கேள்வி கேட்டார். பதில் எதுவும் பேசாத ஹசாரே, அவரை விடுதி அருகேயிருந்த பழத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே மதிற்சுவர் ஏதுமில்லை, பூட்டு இல்லை, காவல்காரர் இல்லை, ஆனாலும் ஒரு பழம்கூடத் திருடப்படவில்லை. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம், இம்மாதிரியான உயர் ஒழுக்கத்தை வெறும் பள்ளிக்கூடங்களால் மட்டுமே சாதிக்க முடியாது, கடவுள் பக்தியால்தான் அடைய முடியும் என்று ஹசாரே சொன்னார்.
பூரண மதுவிலக்கு, தீண்டாமை மறுப்பு, புகைப்பிடிக்காமை போன்ற நல்ல விடயங்களைச் செய்தாலும், ஹசாரே சீர்திருத்தத்தின் ஆபத்தான இரண்டு அம்சங்களை நான் குறிப்பிட்டுக் காட்டியிருந்தேன். “எங்கள் கிராமத்தில் ஜெயின மதத்தவர், புத்த மதத்தவர் போன்றோர் வாழ்ந்தாலும், முஸ்லீம்களோ, கிறித்தவர்களோ கிடையாது” என்று ஹசாரே சேஷாத்ரியிடம் பெருமையாகச் சொன்னார். அதேபோல, கிராமத்தில் விவசாயம், கல்வி வளர்ச்சிக்காக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பல இருந்தாலும், எந்தத் தேர்தலும் நடத்தப்படுவதில்லை. பஞ்சாயத்து தலைவர்கூட போட்டியின்றிதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் ஹசாரே. இந்த சிறுபான்மை விரோத, எதேச்சாதிகார ஆர்.எஸ்.எஸ். தாக்கத்தைச் சாடியே ஆய்வுக் கட்டுரையில் எழுதியிருந்தேன். இவை போன்ற காரணங்களால், 2011-ம் ஆண்டு பிற்பகுதியில் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டம் துவங்கியபோது, அது என்னைப் பெரிதாகக் கவரவில்லை.
அவரோடிருந்த அரவிந்த் கேஜ்ரிவால் 2012 செப்டெம்பர் மாதம் எங்கள் போராட்டத்தின் முக்கியக் கட்டத்தில் இடிந்தகரைக்கும், கூத்தங்குழிக்கும் வந்து ஆதரவு தெரிவித்தார். தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், நாங்கள் அதில் சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். எங்கள் போராட்டம் உச்சத்தில் இருந்ததாலும், பல தமிழக அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்ததாலும், நாங்கள் அந்த அழைப்பைப் பெரிதாக எடுக்கவில்லை. இந்தியில் பெயர் வைப்பீர்கள், ஊழல் பற்றி மட்டுமேப் பேசுவீர்கள், தமிழ்த் தேசியம் விரும்பமாட்டீர்கள் என்றெல்லாம் சில பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டினோம்.
புது தில்லி தேர்தலின்போது, எங்கள் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஆதரவை ஆம் ஆத்மிக்குத் தெரிவித்தோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், அட்மிரல் ராமதாசும், யோகேந்திர யாதவும் பேசினார்கள். எங்கள் நிலையை விளக்கிச் சொன்னேன். பின்னர் டிசம்பர் 29, 2013 அன்று பிரசாந்த் பூஷன் இடிந்தகரைக்கு நேரில் வந்து சந்தித்துப் பேசினார். அவரிடமும் எங்கள் நிலையைச் சொன்னோம். பின்னர் சனவரி 6, 2014 அன்று ஆம் ஆத்மி கட்சித் தோழர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, ஐந்து நிபந்தனைகளை தெரிவித்திருக்கிறோம்:
[1] தங்கள் கட்சியின் அணுசக்திக் கொள்கையை முறையாக அறிவிக்க வேண்டும்.
[2] தமிழகத்தில் “சாதாரண மக்கள் கட்சி” என்று பெயரிட்டு AAP எனும் துணைப் பெயரை பயன்படுத்துவோம்.
[3] தமிழ் ஈழம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல், கடற்கரை கபளீகரம், தாதுமணற் கொள்ளை, நதிநீர்ப் பங்கீடு, சமூக நீதி, சிறுபான்மையினர் உரிமை போன்றப் பிரச்சினைகள் எங்களுக்கு முக்கியமானவை. இப்பிரச்சினைகளில் எங்கள் உணர்வுகளும், ஈடுபாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கட்சியின் தமிழகக் கிளைக்கு சுயாட்சி அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் மாநில அலுவலகங்களில் ஒரு நாற்காலியை நகர்த்திப் போடுவதென்றாலும் தில்லியிடம் அனுமதி பெறும் அவலம் சா.ம.க.வில் இருக்கக் கூடாது.
[4] தமிழகப் பொறுப்பாளரான திருமதி. கிறிஸ்டி சாமியோடு பணியாற்ற அணியமாய் இருந்தாலும், எங்கள் போராட்டக்காரர்கள் சா.ம.க. பொறுப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் (கட்சிக்குள் இன்னொரு குழுவும் இயங்கிக் கொண்டிருப்பதை இப்போது அறிகிறோம்).
[5] தமிழகத்தில் தேர்தல் யுக்திகள் வகுக்கும்போது, தமிழ்த் தேசியம் பேசும், சிறுபான்மையினர் நலம் நாடும் எங்கள் ஆதரவுக் கட்சிகளையும் ஒரு கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். போராடும் மக்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அரசியலில் இறங்குவதும், தேர்தலில் குதிப்பதும் என்று மிகத் தெளிவாக, உறுதியாகச் சொல்லியிருக்கிறோம். இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழு, எங்கள் பகுதி மக்கள், சமுதாயத் தலைவர்கள், ஆதரவுக் குழுக்கள், ஆதரவுக் கட்சிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அனைவரும் உடன்பட்டாலே மேற்கொண்டுத் தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறோம். ஒரு நல்ல முடிவினை எடுக்க நீங்களும் உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்


