பரத நாட்டிய கலைஞர் ராணுவ அதிகாரியானார்

பரத நாட்டிய கலைஞர் ராணுவ அதிகாரியானார்

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சியை நிறைவு செய்த 183 பேர், லெப்டினன்ட்டு களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதில், தமிழகத்தின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜி.வைஷாலி என்ற பரத நாட்டிய கலைஞர் ராணுவ அதிகாரியாக பதவியேற்றுக்கொண்டார். இவரது தந்தை எஸ்.சி.கணேசன் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தாயார் ஜெயந்தி இல்லத்தரசி. இவருக்கு மஞ்சுளா என்ற சகோதரியும் உள்ளார். வைஷாலி முதல் தலைமுறையாக ராணுவத்தில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
woman mili mar 13
லெப்டினன்ட் பதவி ஏற்றுக்கொண்ட ஜி.வைஷாலி, “எனது சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். நான் சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.காம். பயின்றுள்ளேன். நான் கடந்த 16 வருடங்களாக பரதநாட்டியம் ஆடி வருகிறேன்.
கடந்த 2012-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு அகில இந்திய அளவில் சிறந்த பரதநாட்டிய கலைஞராக தேர்வு பெற்றேன். துபாய், மஸ்கட், எகிப்து, ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று பரதநாட்டியம் ஆடி உள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துள்ளேன்.

நான் கல்லூரியில் படிக்கும் போது, என்.சி.சி.யில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, ராணுவத்தில் சேர வேண்டும் என்று எண்ணி இருந்தேன். தற்போது அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றினாலும், ஓய்வு நேரங்களில் எனது பரதநாட்டியத்தை தொடர்வேன்.ராணுவத்தில் ஆண்களும், பெண்களும் சமமாகவே கருதப்படுகிறார்கள். முதலில் ஆண்களுடன் போட்டி போட்டு பயிற்சி பெறுவது சிரமமாக தெரிந்தபோதிலும், இப்போது அது மகிழ்ச்சியாகவே உள்ளது” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!