தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதி தான்!- கருணாநிதி வார்னிங்
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறையின் அமைச்சர், “டெங்கு போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தக் கூடிய மலை வேம்பு, நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றைக் கண்டறிந்து, அதைக்கொடுத்த காரணத்தினால் இன்றைக்கு தமிழகத்திலே டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. டெல்லியை மிரட்டும் டெங்கு, ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தை நெருங்க அச்சப்படுகிறது” என்று கூறினார். ஆனால் தமிழகத்தில் இப்போது என்ன நிலை?டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அரசும், மாநகராட்சியும் மறைத்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டு, அமைச்சர்கள் ஆய்வில் அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்றும் தெளிவாகியுள்ளது.

அரசு தரப்பில் இருந்து வந்துள்ள அழுத்தம் காரணமாகத்தான் சென்னை மாநகராட்சியினர், டெங்கு காய்ச்சலால் ஒருவர் உண்மையில் இறந்தால் கூட, அதற்கான சான்றிதழைத் தர மறுத்து வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளைக் கொடுக்காமல், மாநில சுகாதாரத் துறையினர் அக்கறையின்றி இருப் பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த டெங்கு காய்ச்சல் வரத் தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் சார்பில் பல முறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும், அ.தி.மு.க. ஆட்சியினர் அதிலே அக்கறை காட்டவில்லை.அரசு நிர்வாகமே அனாதையாகி விட்டது. தலைமை எவ்வழியோ, அவ்வழியே தானே அமைச்சர்களும் நடப்பார்கள். இந்த அழகில் தான் தமிழகத்திலே ஆட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இதற்குப்பிறகும், அரசு நடவடிக்கை எடுக்க முன்வராமல் அலட்சியப்படுத்துமானால், தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி அதோகதி தான். 2016-ம் ஆண்டு வருகின்ற பொதுத்தேர்தல் தான் பின்னடைவுகளுக்கெல்லாம் விடிவு ஏற்படுத்தும்” என் று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


