“தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன! – மோடி திருச்சி ஸ்பீச.
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் இளந்தாமரை மாநாடு இன்று மாலை நடந்தது. பிரசார தொடக்க பொது கூட்டத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் போன்ற வாகனங்கள் மூலம் இன்று காலை முதலேயே ஏராளமான தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.மோடி வருகையையொட்டி மாநாட்டு மைதானம் மற்றும் திருச்சி மாநகர் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் நரேந்திர மோடி தொடக்க உரையை தமிழ் மொழில் தொடங்கினார். தமிழ் மொழியின் பெருமைகளையும், பழமையும், வள்ளுவனைப்பற்றியும் பேசினார்.

கூட்டத்தில் அவர் தமிழில் பேசும்போது” பாரத் மாதாஹே ஜே, தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப சிங்கங்களே! அனைவருக்கும் வணக்கம்!, தமிழ்நாடு பெருமை வாய்ந்த நாடு, கம்பன், வள்ளுவன் பிறந்த நாடு இந்த தமிழ்நாடு. தமிழ்நாடு என்று சொன்னால் காதில் தேன் வந்து பாயும் என்று பாடினார் பாரதியார். திருச்சி தமிழ்நாட்டின் இதயம் போல் மத்தியில் இருக்கும் மாவட்டம், காவிரியும் அலங்கரிக்கும் மாவட்டம், சோழர்கள் ஆண்ட திருச்சியில் வசிக்கும் அனைவருக்கும் மீண்டும் வணக்கம்’ என்று பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழர்தான் இ மெயிலையும் கண்டுபிடித்தவர். உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். தமிழகமும், குஜராத்தும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் நாட்டு விடுதலைக்காகப் போராடி இருக்கின்றனர். குஜராத்தில் இருந்து காந்தி தமிழகத்துக்கு வருவாரேயானால் இங்கே ராஜாஜி நம்பிக்கைக்குரியவர். தமிழகத்தில் இருந்து குஜராத்தை மான்செஸ்டர் என்று அழைக்கிற அளவுக்கு ஏராளமானோர் முன்னேற்றியிருக்கின்றனர். இங்கே ஒரு சிறிய குஜராத் என்று சொல்லும் அளவுக்கு செளகார்பேட்டை இருக்கிறது.
குஜராத்திலேயே ஒரு சிறிய தமிழகமாக மணிநகர் இருக்கிறது. அந்த மணிநகர்தான் எனது சட்டசபை தொகுதி. மணிநகர் தமிழ் வாக்காளர்கள்தான் என்னை பெரும் வெற்றி பெற வைத்தனர். பாலில் சக்கரை இரண்டற கலந்து இருப்பதைப் போல தமிழர்களும் குஜராத்திகளும் வாழ்கின்றனர். இரண்டு மாநிலங்களுமே கடற்கரை மாநிலங்கள். இரண்டு மாநிலங்களுமே கடல் மார்க்கமாக பல நாடுகளுடன் வர்த்தகங்களை நடத்தியிருக்கின்றன. கடற்கரையை ஒட்டி இருக்கிற நமது இரு மாநிலங்களுக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன.
எப்படி குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனரோ, அதேபோல் இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கி செல்கிறது? தமிழக மீனவர்களை இலங்கை ஏன் தூக்கி செல்கிறது? இதற்கான தைரியம் இந்த நாடுகளுக்கு எப்படி வந்தது? பிரச்சனை கடல் மத்தியில் அல்ல.! மத்தியில் இருக்கிற பலமற்ற அரசால்தான் இந்த தைரியம் இந்த நாடுகளுக்கு வந்துள்ளது!!
குஜராத் அல்லது தமிழகம் அல்லது கேரளா அல்லது கர்நாடகாவாக இருந்தாலும் மீனவர்கள் தினசரி வேலைக்கு நிம்மதியாக செல்ல வேண்டுமெனில் மத்தியில் இருக்கும் பலவீனமான அரசு தூக்கி எறியப்பட வேண்டும். குஜராத்தில் இருக்கிற மீனவர்களை 6 மாதம் சிறையில் வைத்து பாகிஸ்தான் சித்திரவதை செய்கிறது. இதே நிலைமைதான் தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் நேருகிறது. ஆனால் வாஜ்யாப் ஆட்சிக் காலத்தில்தான் இப்படி எதுவும் நடைபெறவில்லை என்று பேசினார்.


