தமிழகத்தில் ’மகாராஜா எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலில் ஒரு ட்ரிப் அடிக்கலாமா?
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ‘இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனம்’ (ஐ.ஆர்.சி.டி.சி) மும்பை–டெல்லி– கொல்கத்தா இடையே ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ ரயிலை பற்றியும் அதன் சிறப்பு அமசங்கள் பற்றியும் முன்னரே நம் ஆந்தையில் தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் முதன் முறையாக தென்மாநிலங்களின் வழியாக இயக்கும் வகையில் ‘தென்னகத்து அணிகலன்கள் – பருவ மழைக்கால சிறப்பு ரயில்’ என்ற ரயிலை வரும் ஜூலை 1–ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்றிலிருந்து தொடங்கி விட்டது.

இது குறித்து இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் தென்மண்டல பொதுமேலாளர் எஸ்.எஸ்.ஜெகநாதன், கூடுதல் பொதுமேலாளர் ரவிக்குமார் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “மன்னர்களின் ராஜ பயணத்தை நினைவூட்டும் வகையில் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட மகாராஜா ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலகில் 5 மிகப்பிரபலமான சொகுசு ரயில்களில், இந்த ரயில் 2–வது இடத்தை பிடித்து உள்ளது. ஜூலை 1–ந்தேதி இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் நாகர்கோவில் வழியாக காரைக்குடிக்கு 2–ந்தேதி காலை சென்று சேருகிறது. அங்கு தமிழ் கலாசார உணவு வழங்கப்படுகிறது. கட்டிடங்கள், ஆத்தங்குடி தரை ஓடுகள் செய்யும் இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகிறது.
அன்று இரவு அங்கிருந்து புறப்பட்டு 3–ந்தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு இந்த ரயில் வருகிறது. அங்கிருந்து சொகுசு பஸ்களில் மகாபலிபுரத்துக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் மீண்டும் அன்று இரவு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு மைசூர், ஹம்பி, கோவா வழியாக மும்பைக்கு 8–ந்தேதி இந்த ரயில் சென்று சேருகிறது. இந்த இடங்களில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகிறது. பயணிகள் 8 பகல் பொழுதும், 7 இரவுகளிலும் இந்த ரயிலில் பயணிக்க முடியும்.
இதில் பயணம் செய்வோருக்கு ரெயில் செல்லும் அந்தந்த மாநிலங்களின் உணவுவகைகளுடன், வெளிநாட்டினருக்காக அவர்கள் நாட்டு உணவு வகைகளும் கிடைக்கும் இதற்காக 2 சமையல் கூடங்கள் உள்ளன. மன்னர்கள் போன்று உணவு தங்க தட்டிலும், டீ, காபி போன்றவற்றை தங்க ‘கப்’புகளிலும் வழங்கப்படுகிறது.இதுதவிர வெளிநாடு மற்றும் உள்நாட்டு வகை மதுபானங்கள் அடங்கிய பார் ஒன்றும் உள்ளது. பயணம் செய்ய ‘டியூலக்ஸ் கேபின்’ கட்டணம் ரூ.5 லட்சத்து 680, ‘ஜூனியர் சூட்’ ரூ.7 லட்சத்து 23 ஆயிரத்து 420, ‘சூட்’ ரூ. 10 லட்சத்து 9 ஆயிரத்து 330, ‘பிரெசிடென்சியல் சூட்’ ரூ.17 லட்சத்து 33 ஆயிரத்து 410 ஆகும். வெளிநாட்டு பயணிகள் முழு தொகையும் செலுத்த வேண்டும்.
இந்தியர்களுக்கு மட்டும் சலுகையாக பயணி தன்னுடன் ஒருவரை அழைத்து வரலாம். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தை களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 8 நாட்கள் பயணம் செய்ய முடியாதவர்க ளுக்காக அவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாள் பயணம் செய்ய ‘டியூலக்ஸ் கேபின்’ கட்டணமாக ரூ.33 ஆயிரத்து 250 வசூலிக்கப்படுகிறது. பயணிகள் செல்லும் இடங்களில் அந்தந்த மாநில வழக்கப்படி பாரம்பரிய முறையில் இசைக்கருவிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவுதான் தொடங்கப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.themaharajas.com அல்லது http://www.irctctourism.com என்ற இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதுதவிர 98409–02916, 90031–40657, 98409–02919 என்ற அலுவலக செல்போன்எண்கள் மூலம் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். வேலைநாட்களில் ravindran.m@irctc.com. malathi63262irctc.com. tourismmas@irctc.com ஆகிய இ–மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


