தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு தடை -சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு தடை -சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது கடைபிடிக்கும் விதிமுறைகள், மத்திய அரசு கட்டுப்பாடு என அனைத்தையும் கணக்கில் கொண்டாலும், இது சட்டவிரோதமானது. இந்த போட்டிகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படுவது இல்லை. எனவே கட்டுப்பாடுகள் தோல்வியடைந்துள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதிக்கபடுவதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
jallikattu-draw
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்றும் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவது இல்லை என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் காளைகள் விளையாட்டு மெக்சிகோ, கனடா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.

காளை சாதுவான மிருகம் கிடையாது. உலகம் முழுக்க பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் விலங்கு. சில நாடுகளில் காளை விளையாட்டுகள் முடிந்ததும் அதனை ஈட்டியால் குத்திக் கொன்று விடுகின்றனர். இங்கு இதுபோன்ற கொடுமைகள் நடப்பது இல்லை. மாறாக, காளைகளின் மீது பெரிதும் அக்கறை காட்டப்படுகிறது. அரசு மற்றும் நீதிமன்றங்கள் வகுத்த விதிமுறைகள் அனைத்தும் முறைப்படி பின்பற்றப்படுகின்றன என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.மத்திய அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகளின் மீது ஏதாவது கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும் மிருகங்கள் நலவாரியத்தின் அதிகாரிகளை நியமிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

மிருகங்கள் நலவாரியத்தின் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனைத்து விதிமுறைகள், மத்திய அரசு கட்டுப்பாடு அனைத்தையும் கணக்கில் கொண்டாலும் இது சட்டவிரோதமானது. போட்டிகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இதுபோன்று கட்டுப்பாடுகள் தோல்வியடைந்ததால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 24–ந்தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 13 அம்சங்களை சுட்டிக் காடி சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.