தி.மு.க. இழந்த செல்வாக்கை பெற சில யோசனைகள்:By பா. கிருஷ்ணன்
நடந்து முடிந்த தேர்தலில் தேசிய அளவில் நரேந்திர மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் அதன் தாக்கம் இல்லை என்பது மட்டுமல்ல. எத்தனைக் கட்சிகள் கூட்டணிகள் வந்தாலும் இரு முன்னணிக் கழகங்களே வெற்றி பெறும் என்பதை அக்கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் காட்டுகிறது. அதைப் போல தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசும், தேமுதிகவும் இடம் பெற்றிருந்தாலும் அண்ணா திமுகவின் வெற்றியை அசைத்திருக்க முடியாது என்பதையும் தேர்தல் முடிவு காட்டுகிறது.

இந்தத் தேர்தல் தமிழகக் கட்சிகளின் சொந்த பலத்தை நிரூபிக்க ஒரு சரியான வாய்ப்பை அளித்துள்ளது. எந்தெந்தக் கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை வைத்துப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. அண்ணா திமுக மட்டுமே தமிழகத்தின் 1.75 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது, 44.3 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் அக்கட்சியின் சொந்த வாக்குகளே என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதே சமயம் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்தது மொத்தம் 1.06 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளது.திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை இடம் பெற்றிருந்தாலும் திமுகவுக்கு 23.4 சதவீதம் வாக்குகளே கிடைத்துள்ளன. தேமுதிக கடந்த தேர்தலில் நிறைய வாக்குகள், இடங்களைப் பெற்றிருந்தாலும், இந்த முறை 5.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
அதே சமயம், பாஜகவுக்கு 5.4 சதவீதம் கிடைத்துள்ளது. இத்தனைக்கும் பாஜக 7 இடங்களில் போட்டியிட்டது. தேமுதிக-வுக்கு கூட்டணியில் 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக வை விடக் குறைவான இடங்கள் ஒதுக்கீடு பெற்ற பா ம க 8 இடங்களில் போட்டியிட்டு 4.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஏழு இடங்களில் போட்டிய தேமுதிக வை விடக் குறைவான இடங்கள் ஒதுக்கீடு பெற்ற பா ம க 8 இடங்களில் போட்டியிட்டு 4.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஏழு இடங்களில் போட்டியிட்ட மதிமுக வுக்கு 3.6 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுக அணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1.5 சதவீதமும், புதிய தமிழகம் கட்சிக்கு 0.7 சதவீதமும் மனித நேய மக்கள் கட்சிக்கு 0.6 சதவீதம், முஸ்லிம் லீக் கட்சிக்கு 0.5 சதவீதம் வாக்குகளே கிடைத்துள்ளன. புதிதாகக் களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 0.5 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 17.08 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 20 .20லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது.
இதற்கிடையில் திராவிட முன்னேற்றக் கழகம் இழந்த மதிப்பையும் செல்வாக்கையும் மீண்டும் பெற நட்பு ரீதியிலான சில யோசனைகள்:
1) கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் போன்றோர் கட்சியில் இருந்து ஓய்வு பெறவேண்டும்.
2) ஊழல்வாதிகளை, கறை படிந்தவர்களை தயவு தாட்சண்யம் இன்றி, கட்சியில் இருந்து விலக்க வேண்டும்.
3) கட்சியின் தலைவர் மட்டும் அல்லாமல் அனைத்து நிர்வாகிகளும் தங்கள் குடும்பத்தினர் யாரும் கட்சியின் பெயரைச் சொல்லி காரியம் செய்து கொள்வதை முழுமையாக அனுமதிக்கக் கூடாது.
4) சாதி, மத துவேஷ பேச்சுகள், விரசமாக பேசுவது, மாயையில் மக்களை ஆழ்த்தும் நடைமுறைகளைச் சுத்தமாகத் துடைத்து எறிய வேண்டும்.
5) கட்சித் தொண்டர்களை வாக்கு திரட்டும் இயந்திரங்களாக மாற்றிய சீர்கேட்டைச் சரி செய்தாக வேண்டும். அவர்களை உருப்படியான மக்களாக்கி, கட்சியின் கொள்கைக்கையைப் புரிந்துகொண்டு, சமூகத்துக்கு உழைப்போராக மாற்ற வேண்டும்.
6) கட்சித் தலைவர் யாராக இருந்தாலும் அண்ணாவைப் போல ஓர் உயர்நிலைக் குழுவை (பொலிட் பீரோ) அமைத்து, அதன் வழிகாட்டுதல்படியே செயல்படவேண்டும். தலைவர் என்பவர் நாட்டின் பேரரசர் போல செயல்படக் கூடாது.
7) மத்தியில் சாதகமான சூழல் வந்தாலும், கடைசி வரையில் எல்லாம் அனுபவித்துவிட்டு, கடைசி நேரத்தில் “கொள்கைக்காக விழித்துக் கொள்ளும்” போக்கை நிறுத்தியாக வேண்டும்.
8) அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், இரா செழியன், முரசொலி மாறன் ஆகியோருக்குப் பின்னர் தேசிய அளவில் மதிக்கப்படும், சரியான பார்லிமேண்டரியன் இல்லாத குறையை முதலில் மாற்றியே ஆக வேண்டும்.
9) இன்னும் உளுத்துப்போன சில கொள்கைகளை வறட்டுத் தனமாகப் பிடித்துக் கொண்டும் பிரசாரம் செய்து கொண்டும், தனிப்பட்ட வாழ்வில் அதற்கு முரணாகச் செயல்படுவதையும் கைவிட்டாக வேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், கட்சிக்கு ஒரு நல்ல அண்ணாவை உருவாக்க வேண்டும்.
செய்வார்களா?
நன்றி : பா. கிருஷ்ணன் @http://puthiyadharisanam.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/


