தமிழ் குரல் / AI Voice
டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என பொது மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கேட்டுள்ளது. இதன் முடிவு வரும் வரை, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதை தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு உள்ளது

டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்களில் வெற்றி பெற்ற பாஜ கூட்டணி, ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. இதை தொடர்ந்து, பாஜவுக்கு அடுத்தபடியாக 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். கடந்த சனிக்கிழமை கவர்னர் ஜங்கை ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். பாஜ மற்றும் காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக் கொள்ள 18 நிபந்தனைகள் விதித்து, அக்கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். ஆட்சியமைப்பது பற்றி முடிவு எடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டார்.
ஆனால், டெல்லி சட்டமன்ற பதவிக்காலம் முடியும் வரை மட்டும் அவகாசம் அளிப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதத்துக்கு காங்கிரஸ் பதில் அனுப்பியிருந்தது. அதில் 18 நிபந்தனைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும் 2 நிபந்தனைகள் சட்டமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவை என்றும் கூறப்பட்டிருந்தது. காங்கிரசின் பதில் குழப்பமாக இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். மேலும், அவர் கூறியதாவது: ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எங்கள் கட்சி நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு உள்ளது. எனக்கு எந்த கட்சியுடனும் கூட்டு சேருவதில் விருப்பம் இல்லை.
ஆனால், நாங்கள் ஆட்சியமைக்கும் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக பலர் சொல்கின்றனர். இதனால், பொது மக்களின் கருத்தை கேட்டுள்ளோம். எஸ்எம்எஸ் வாயிலாக பொது மக்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வேண்டுகோள் விடுத்ததில், இதுவரை சுமார் 4.5 லட்சம் பேர் எஸ்எம்எஸ்சில் கருத்து தெரிவித்துள்ளனர். நாங்கள் ஆட்சியமைக்க வேண்டுமென மக்கள் கருத்து தெரிவித்தால், அதை ஏற்போம். நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் பெரிய பிரச்னை எழுப்ப வாய்ப்பில்லை. எனவே, முதல் 5, 6 மாதங்களில் எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கிய பணிகளை மேற்கொள்வோம். ஒரு வேளை, காங்கிரஸ் ஏதாவது பிரச்னையை கொடுத்தால், நாங்கள் மறுதேர்தலுக்கு பரிந்துரைத்து மக்களை சந்திப்போம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். எனவே, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் முதல் முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. இதற்கிடையில், கவர்னர் விதித்த கெடு கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும்,பொது மக்களிடம் கருத்து கேட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கேட்டிருந்த 10 நாள் கால அவகாசத்தை கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த காலக்கெடுவுக்குள் கெஜ்ரிவால் தனது முடிவை தெரிவிக்காவிட்டால், அதன்பின் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
