ஜெ. மரணம் = எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்! – ராமதாஸ் + ஸ்டாலின் கோரிக்கை!
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் இன்று வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் ‘வார்தா’ புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியதுடன், புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களையும், மீட்புப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதை அரசியலாக்க நான் விரும்பவில்லை.திமுகவும் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இருந்தாலும், தமிழகத்தின் முதல்வராக, தமிழக மக்களை கட்டிக் காக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
இப்போது மட்டுமல்ல, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவர் நலம் பெற்று வருகிறார், விரைவில் வீடு திரும்புவார் என்று செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையிலும் கூட திமுக மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சியினரும் தெரிவித்த கருத்து என்னவெனில், அவருடைய சிகிச்சை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப் படவில்லை என்பதுதான். அண்ணா முதல்வராக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அன்றைக்கு அரசின் சார்பில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்ஷா தினசரி முதல்வரின் உடல் நிலை பற்றிய தெளிவான விவரங்களை, காலை, மாலை என இருமுறை அறிக்கைகள் மூலம் மக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்.
அதேபோல எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு இருந்த போது, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரான ஹெச்.வி.ஹண்டே முறையான அறிவிப்புகள் மூலம் அவரது உடல் நலன் பற்றி அறிவித்தார். ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அரசும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, சுகாதாரத்துறை அமைச்சரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, சுகாதாரத்துறையின் செயலாளரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை,
முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய, முதல்வரின் இலாகாக்களை எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அப்போலோ மருத்துவமனையின் சார்பில் மட்டும் தான் அவ்வப்போது ஒருசில அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நிலையில் இருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும்.இப்போது, ஜெயலலிதா மறைந்து விட்டார். அவரது இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. அதற்காக எல்லோரும் வருத்தம், வேதனைப்படுகிறோம். இந்த நிலையில் இன்றைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து பல்வேறு செய்திகள், ஊடகங்களில், பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.
அதுமட்டுமல்ல, கலையுலகத்தில், திரைத்துறையில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் பல்வேறு விதமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நேற்றைக்கும் கூட உச்ச நீதிமன்றத்தில் கூட ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட இன்றைக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நானும் வலியுறுத்துகிறேன்.
ஏனென்றால், இதை அரசியல் நோக்கத்தோடு சொல்லவில்லை, முதல்வரின் மரணம் பற்றி பல தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தினை முழுமையாக போக்க வேண்டுமென்று சொன்னால், ராமதாஸ் குறிப்பிட்டது போல, வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளதால், அந்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசாவது வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து” என்று ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து 10 நாட்களாகிவிட்ட நிலையில், அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட சோகமும், வேதனையும் இன்னும் மறையவில்லை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த ஐயங்கள் அதிகரித்து வருகின்றன.அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலரும் என்னை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஐயம் தெரிவித்து வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததில் தொடங்கி இன்று வரை பொது இடங்களில் என்னை சந்திக்கும் அதிமுக தொண்டர்களும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணைக்கு ஆணையிடக் கோரும்படி என்னிடம் கோரிக்கை விடுத்தனர். அதிமுகவினர் தெரிவித்த ஐயங்களும், கோரிக்கைகளும் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடியதாக இல்லை.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி இரவில் ஜெயலலிதா மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் திசம்பர் 5-ஆம் தேதி நள்ளிரவில் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப் பட்டது வரையிலான 75 நாட்களிலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வெளிப் படையானதாக இல்லை. அந்த தகவல்கள் அனைத்தும் கடமைக்கு வெளியிடப்பட்டவையாகவே அமைந்திருந்தன.
1984-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை. மாறாக, அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் எச்.வி.ஹாண்டே அவர்கள் தான் முதலமைச்சரின் உடல்நிலை குறித்த சீரான இடைவெளியில் வெளியிட்டு வந்தார். அவை நம்பத்தகுந்தவையாக இருந்தன. ஆனால், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரங்களை மருத்துவமனை நிர்வாகமே வெளியிட்டது.
அதுமட்டுமின்றி, முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று விட்டதாகவும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட அவரை சந்தித்து நலம் விசாரிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட காலத்தில் தமிழக ஆளுனர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுனர்கள் மற்றும் முதலமைச்சர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நலம் விசாரிக்க வந்த போதும் கூட அவர்கள் ஜெயலலிதாவை சந்திப்பது மிக கவனமாக தவிர்க்கப்பட்டது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், முதலமைச்சரின் பொறுப்புகளை கவனித்த மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனையில் தங்கியிருந்த போதிலும் கூட, அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட வில்லை. ஒரு மாநில முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை முதலமைச்சரின் பொறுப்புக்களை கவனித்துக் கொள்ளும் மூத்த அமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கவனித்துக் கொள்வது தான் மரபாகும். 2009-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போது, பிரதமரின் பொறுப்புக்களை கவனித்துக் கொண்ட மூத்த அமைச்சர் பிரணாப்முகர்ஜி அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாசும் தான் உடனிருந்து சிகிச்சையை கவனித்தனர். பிரதமருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர் அன்புமணி தான் வெளியிட்டார்.
ஆனால், தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பை கவனித்துக் கொண்ட மூத்த அமைச்சரும், சுகாதார அமைச்சரும் பெயரளவுக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டனர். சிகிச்சை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவர்கள் இருட்டிலேயே வைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தாண்டி முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தீர்மானிக்கும் சக்தியாக வேறு சிலர் இருந்தனர். முதலமைச்சர் என்ற முறையில் அரசு சார்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளில் இருந்தவர்களை ஒதுக்கிவைத்து விட்டு, அனைத்து வகையான முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் எந்த அடிப்படையில் அந்த சிலருக்கு வழங்கப்பட்டது? என்பது தான் அதிமுகவினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ள வினாவாகும். இந்த வினாவை எழுப்ப அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு; அதற்கு பதிலளிக்கும் கடமை அரசுக்கு உள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே அவர் குணமடைந்து விட்டதாகவும், அடுத்த சில நாட்களில் இல்லம் திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், எப்போதும் இல்லாத வகையில் தீபஒளி திருநாளுக்கான போனசை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்ததாகவும் திட்டமிட்டு செய்திகள் பரப்பப்பட்டன. இந்த செய்திகள் வெளியான சில நாட்களில் முதலமைச்சருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதால் அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியானது. இடையில் நடந்தவை என்ன? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
75 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் தேறி விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவித்ததன் பின்னணியில் பெரும் மர்மம் இருப்பதாக அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருதுகின்றனர். அவர்களின் இந்த ஐயம் தீர்க்கப்பட வேண்டும். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த போது பதப்படுத்தப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றுக்கு பதிலளிக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட சோகத்திலிருந்து அதிமுகவின் தொண்டர்கள் இன்னும் மீளாத நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியும், இதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமும் தொண்டர்களின் வேதனையை அதிகப்படுத்தியுள்ளன. அதிமுகவின் அனைத்து வெற்றிக்கும் ஜெயலலிதா மட்டுமே காரணம் என்று கூறிவந்த மூத்த தலைவர்கள், இப்போது ‘‘அதிமுகவின் வெற்றிக்கு ஜெயலலிதா காரணமல்ல… இரட்டைஇலை சின்னம் தான் காரணம்’’ என்று கூறத் தொடங்கியிருப்பதிலிருந்து அவர்கள் யார்? அவர்கள் யாருக்கு துரோகம் செய்கிறார்கள்? யாருக்கு விசுவாசமாக இருப்பது போல நடிக்கிறார்கள் என்பதை தொண்டர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இந்த விஷயத்தில் உண்மையை உலகுக்கு உணர்ந்த வேண்டிய ஊடகங்கள், யாருக்கோ அதிகாரத்தை பெற்றுத் தர நடத்தப்படும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக மாறியிருப்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை உணர்ந்து உண்மையாக நடக்க வேண்டும்.முதலமைச்சராக ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவரது கட்சியினருக்கு அவர் எப்போதும் போற்றுதலுக்குரியவராகவே இருந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் குறித்தும் அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஆயிரமாயிரம் ஐயங்கள் நிலவும் வகையில், அவற்றை போக்கும் வகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்று கேட்டு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


