சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 10–ந்தேதி தொடக்கம்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி 10–ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்குகிறது. 22–ந்தேதி (13 நாட்கள்) வரை இக்கண்காட்சி நடக்கிறது. 700 அரங்குகள் அமைக்கப்படுகிறது.கலை, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு என அனைத்து துறை சார்ந்த நூல்கள் இடம் பெறுகின்றன. சுமார் 7 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.

இக்கண்காட்சி வார நாட்களில் மதியம் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும்.
இதில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஓவிய காட்சிக்கேற்ப சிறுகதை எழுதும் போட்டியும் நடத்தப்படுகிறது. இவற்றுக்கு பரிசுகள் வழங்கப்படும். குறும்பட போட்டியும் நடக்கிறது.இத்தகவலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் மீனாட்சி சோம சுந்தரம் தெரிவித்து உள்ளார்.


