செஞ்சிக்கோட்டையை பலூனில் பறந்தபடி பார்க்க தயார்தானே?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பெருமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை மூன்று குன்றுகளால் சூழப்பட்டுள்ளது. முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களாலும் பல முறை இக்கோட்டை தாக்குதலுக்கு ஆளான போதும் மாவீரன் தேசிங்கு ராஜனின் வரலாற்றை பறைசாற்றி கம்பீரமாக நம் கண் முன் காட்சி அளிக்கிறது கல்லில் உருவான இக் கலை பொக்கிஷம். கல்விச் சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக திகழ்கிறது.இந்த செஞ்சிக்கோட்டையில் சிலைகள் சில சிதிலம் அடைந்தாலும் கோட்டையின் அமைப்பு தோற்றம் ஆகியவை அற்புதமாக காட்சியளிக்கிறது. மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் அரண்மனைகள், கோட்டை கொத்தலங்கள் ஆகியவற்றை நாம் ஏட்டிலும், சினிமா செட்டிங் ஆகியவற்றில் பார்த்திருப்பதை .ஆகாயத்தில் பறந்தபடி ரசித்துப் பார்க்க பைலட் பலூன் பயணத்தை சுற்றுலா வளர்ச்சித் துறை அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இதற்கான சோதனை முயற்சி வெற்றியடைந்தது.பலூனைப் பறக்கவைக்கும் சோதனை முயற்சி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செஞ்சியில் நடத்தப்பட்டது. சென்னை குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத் துடன் இணைந்து முதல்முறையாக இந்த முயற்சியைத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மேற் கொண்டுள்ளது

சென்னை- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செஞ்சி சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மூலம் பராமரித்து பாதுகாக்கப்படும் இக்கோட்டையில் சிவன் கோயிலும், அம்மன் கோயிலும். வேலூர் வாயில், சாதத்துல்லாகான்மசூதி, பாண்டிச்சேரி வாயில், வேங்கடரமணர் ஆலயம் (வழிபாடு இல்லை), ராஜகிரி மலை நுழைவு வாயிலில் உள்ள சுழலும் பீரங்கி, கல் பட்டரை, மனதை கொள்ளை கொள்ளும் கல்யாணமஹால், சிப்பாய்கள் தங்கும் அறைகள், குதிரை லாயங்கள், யானைக்குளம், வெடி மருந்து கிடங்கு, உடற் பயிற்சி கூடம், போர்கருவிகளை வைக்கும் இடம், பிரம்மாண்டமான தானியக் களஞ்சியம், வேணுகோபால் சுவாமி கோயில் (சிதிலம் அடைந்து உள்ளது.) ஏழு கன்னிமார்கள் கோயில், தேசிங்கு உடல் எரியூட்டபோது மனைவி ராணிபாய் உடன் கட்டை ஏறிய இடம். சர்க்கரை குளம், செட்டிக்குளம், வீரஆஞ்சநேயர் ஆலயம் (வழி பாட்டில் உள்ளது.) மரணக்கிணறு, சாதத்துல்லாகான் மசூதி இவை அனைத்தும் கோட்டையின் கீழ் அமைந்துள்ளது.
இத்தகைய பிரமாண்ட செஞ்சிக்கோட்டையை கண்டு ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். என்றாலும் செஞ்சிக்கோட்டை முழுவதையும் அவர்களால் சுற்றிப் பார்க்க முடிவதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையிலும் பைலட் பலூன் பயணத்தைத் தமிழக சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.இதுகுறித்து குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவன அதிகாரிகள் கிருஸ்டோபர் பிரசாத் மற்றும் பெனடிக் சேவியோ,”தைவான், தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பைலட் பலூன் பயணம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டையிலும், மத்தியபிரதேசத் தில் பெஞ்ச் புலிகள் காப்பகத்திலும் இந்த பைலட் பலூன் பயணம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.முதல் முயற்சியாக தமிழகத்தில் இச்சோதனை நடத்தப்படுகிறது.

செஞ்சியில் 2 நாள் பைலட் பலூனை இயக்கி பாதுகாப்பாக பயணத்தை உறுதி செய்துள்ளோம். பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனமலை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது. இந்தவகை பலூன்கள் பாதுகாப்பானது.உலக அளவில் இதை உறுதிசெய்துள்ளனர். பெரிய பலூனில் 6 பேர் முதல் 8 பேர் வரை செல்லலாம். சுமார் ஒரு மணி நேரம் இந்த பலூன் பறக்கும்”என்று தெரிவித்தனர்.


