கிரிக்கெட் :ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்தியா!.
நியூசிலாந்து உடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

ஹேமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் இழந்து விட்டது இந்தியா.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி 32.3வது ஓவரில் 170 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
இதைத் தொடர்ந்து ஓவர் 42 ஆக குறைக்கப்பட்டது. இதனால், நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 77 ரன்கள் எடுத்தார். டெய்லர் 57 ரன்னும், குப்தில் 22 ரன்னும் அடித்தனர். ஆண்டர்சன் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 44 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் இந்திய அணிக்கு 41.3 ஓவரில் 293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்கள் தவான் – ரோகித் சர்மா ஏமாற்றம் அளித்தனர். தவான் 12 ரன்னிலும். ரோகித் சர்மா 20 ரன்னில் வெளியேறினர்.பின்னர் வந்த கோலி நிதானமாக விளையாடி 78 ரன் எடுத்து வெளியேறினார். கேப்டன் டோனி 56 ரன்னும், ரஹேனா 36 ரன்னும், ரெய்னா 35 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்ததால் இந்திய அணி 41.3 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 15 ரன் வித்தியாசத்தில் மீண்டும் இந்திய அணி தோல்வியை தழுவியது.நியூசிலாந்து தரப்பில் செளதி 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும், கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. ஏற்கனவே நைபீரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தி்ல் தோல்வி அடைந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் இழந்து விட்டது இந்தியா. அதே சமயம் நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்க்து.


