எம்.பி,எம்.எல்.ஏக்களை காக்கும் அவசரச் சட்டம் வாபஸ்- அமைச்சரவை முடிவு
தண்டனை பெற்ற எம்.பி,எம்.எல்.ஏக்களை காக்கும் அவசரச் சட்டம் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடந்தது.இதில் இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

குற்ற வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 10–ந்தேதி அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.
இந்த உத்தரவால் இந்தியா முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி., எல்.எல்.ஏ.க்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள் தங்கள் பதவி போய் விடுமே என்ற கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கிரிமினல் அரசியல்வாதிகளை காப்பாற்றி அவர்களுக்கு துணை போகும் வகையில் மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8–வது பிரிவில் சில மாற்றங்களை செய்தது. அதன் மூலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 2 ஆண்டு தண்டனை பெற்றாலும் பதவியில் நீடிக்க வழி வகை செய்யப்பட்டது.
இந்த திருத்தத்தை அவசரச் சட்டமாக செயல்படுத்த மத்திய மந்திரிசபை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்தது. ஆனால் பா.ஜ.க. எதிர்ப்பால் ஜனாதிபதி அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் ராகுல் ‘‘அவசரச் சட்டம் முட்டாள் தனமானது’’ என்றதால் சர்ச்சை வெடித்தது. அந்த அவசரச் சட்டத்தை திரும்ப பெறுவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழி இல்லை என்ற தர்மசங்கடமான நெருக்கடி உருவாக்கப்பட்டது.
இந்த சர்ச்சை வெடித்த நேரத்தில் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நேற்றிரவு நாடு திரும்பினார். இன்று காலை அவரை ராகுல் சந்தித்து அவசரச் சட்டத்தை வாபஸ் பெற கோரி வலியுறுத்தினார். அதை மன்மோகன் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
ராகுல் சந்திப்பைத் தொடர்ந்து 10.55 மணிக்கு காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டம் மன்மோகன்சிங் வீட்டில் சோனியா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சட்ட மந்திரி கபில்சிபலும் அழைக்கப்பட்டிருந்தார்.
அந்த கூட்டத்திலும் அவசரச் சட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் அவசரச் சட்டத்தை திரும்ப பெறுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.இந்நிலையில் இப்பிரச்னைதொடர்பாக விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடந்தது.இதில் இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.


