உதகையில் மக்களை மிரட்டி வந்த புலியை சுட்டுக் கொன்றது வனத்துறை!

உதகையில் மக்களை மிரட்டி வந்த புலியை சுட்டுக் கொன்றது வனத்துறை!

உதகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மக்களை பயமுறுத்தி வந்த புலியை, வனத்துறையினர் நேற்று (புதன்கிழமை) சுட்டுக் கொன்றனர்.குந்தசப்பை பகுதியில் சுற்றித் திரிந்தபோது, முதல் முறை துப்பாக்கிச் சூட்டில் தப்பிய புலி, இரண்டாவது முறை சுட்டபோது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
jan 23 - tiger shot
உதகையில் மூன்று பேரை அடித்துக் கொன்ற புலியைப் பிடிக்க கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த தேடும் பணியில் கும்கி யானை, மோப்ப நாய்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆட்டோமெட்டிக் தெர்மல் சென்சார் கேமரா, யேர்லி வார்னிங் டிடெக்டிவ் மிஷின் போன்றவைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், குந்தசப்பை கிராமத்தில் பதுங்கியிருந்த புலி சிக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, அங்கிருந்து இடம் பெயர்ந்து திங்கள்கிழமை காலை கப்பச்சி கிராமத்தில் மாட்டை அடித்துக் கொன்று 100 மீட்டர் தொலைவில் உள்ள புதருக்கு இழுத்துச் சென்றுள்ளது அந்தப் புலி. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகினர்.மாட்டின் இறைச்சியை சாப்பிட வரும் புலியை மயக்க ஊசி போட்டு பிடித்துவிடலாம் என நினைத்து இரு கூண்டுகள் அமைத்து இரவு முழுவதும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் காத்திருந்தனர். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை வரை மாட்டின் பக்கமே புலி வரவில்லை.

இதற்கிடையே, கப்பச்சி அருகேயுள்ள கம்பட்டி பகுதியில் புலியை பார்த்ததாக சிலர் கூறினர். இதனால், அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கப்பச்சி, கம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேயிலை தோட்டங்கள் மற்றும் காய்கறித் தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்தனர். புலி நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே, தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட சில பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை உருவானது.

செய்முறை தேர்வுகளில்கூட கலந்துகொள்ள முடியாத நிலை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். புலி விவகாரத்தால் இங்குள்ள 17 பள்ளிகளுக்கு வரும் 24-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தங்களை மிரட்டி வந்த புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றது, அப்பகுதி மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.