இன்று இரவு முதல் கனமழை!
“வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக 48 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கன மழையோ, கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது.”என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. நேற்று சென்னைக்கு தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 420 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டு உள்ளது.
புயல் சின்னம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன்,”வங்கக் கடலில் நேற்று நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும். இதன் காரணமாக 48 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக கன மழையோ, கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

சென்னை சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும். கடலோர மாவட்டங்களில் 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் தரைகாற்று வீசும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று இரவு முதல் மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 6 சென்டி மீட்டர் மழையும், நாகர்கோவில், பாபநாசம் 5செ.மீ., கன்னியாகுமரி, மயிலாடி, இரணியல், பூதப்பாண்டி, மணிமுத்தாறில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.”என்று அவர் கூறினார்.
புயல் சின்னம் கரையை கடக்கும்போது 25 செ.மீ. வரை மழை பெய்யும். இதனால் வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளில் குடிசைகள் மற்றும் வலுவற்ற கட்டிடங்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி துறை முகங்களில் புயல் சின்னம் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


