🦉திருமுருக. கிருபானந்த வாரியார் சமாதி நிலை அடைந்த நாளின்று 😢

🦉திருமுருக. கிருபானந்த வாரியார் சமாதி நிலை அடைந்த நாளின்று 😢

க்த கோடிகளால் “ஞானப்பழம்” என்றும், “வாரியார் சுவாமிகள்” என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர் பக்த பிரமுகர் கிருபானந்தவாரியார். கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர்பட்ட பாடு. அவர் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கிவிடுவார்கள். சொற் பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர். வாரியார் பல முறை வெளிநாடுகளுக்கு சென்று சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறார்.

அவர் போகாத வெளிநாடு இல்லை. வெளிநாடுகளில் பக்தி சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக 1993ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ந்தேதி கிருபானந்தவாரியார் லண்டன் சென்றார். லண்டன் போய்ச் சேர்ந்ததும் அவருக்கு மார்பில் சளி ஏற்பட்டு, நெஞ்சுவலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. எனவே, கிருபானந்த வாரியார் லண்டனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, டாக்டர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவர் குணம் அடைந்தார். 15 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அவரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நவம்பர் 6ந்தேதி மாலை கிருபானந்த வாரியார் விமானம் மூலம் லண்டனில் இருந்து புறப்பட்டார். அவருடன் தம்பி மகன்கள் டாக்டர் திருஞானசிவம், அருள்நந்தி ஆகியோரும் வந்தனர்.

விமானத்தின் முதல் வகுப்பில் கிருபானந்த வாரியார் பயணம் செய்தார். மற்ற இருவரும் 2ம் வகுப்பில் உட்கார்ந்து வந்தனர். விமானம் மறுநாள் (7ந்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு மும்பை வந்து பின்னர் 6 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் முன்பு டாக்டர் திருஞானசிவம், முதல் வகுப்பில் உட்கார்ந்திருந்த கிருபானந்த வாரியாரின் உடல் நிலையை பரிசோதித்தார்.

அப்போது வாரியார் உடல் நிலை சீராக இருந்தது. எனவே டாக்டர் திருஞானசிவம் அவரது இருக்கையில் சென்று உட்கார்ந்து கொண்டார். இதன் பின்பு விமானம் காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதற்கிடையில் கிருபானந்த வாரியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்சு வண்டி வந்திருந்தது. டாக்டர்களும் வந்திருந்தனர். வரவேற்பு அளிப்பதற்காக ஏராளமான பிரமுகர்களும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். விமானம் கீழே இறங்கியதும் டாக்டர் திருஞான சிவமும், அருள் நந்தியும் கிருபானந்த வாரியாரை அழைத்துச் செல்வதற்காக வாரியாரின் இருக்கை அருகே சென்றனர். அப்போது அவர் உறங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனே இருவரும் வாரியார் உறங்குகிறார் என்று நினைத்து அவரது உடலை அசைத்து அழைத்தபோது, அவர் மரணம் அடைந்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு மனம் பகீரென்றது. விமான நிலையத்தில் தயாராக நின்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் “ஆக்சிஜன்” மற்றும் செயற்கை சுவாசம் கொடுத்து கிருபானந்த வாரியாரின் இதயத்தை இயங்கச் செய்ய முயற்சி செய்தனர்.ஆனால் டாக்டர்களின் முயற்சி பயன் அளிக்கவில்லை. (கட்டிங் கண்ணையா)

பின்னர் விமானத்தில் இருந்து வாரியாரின் உடல் தூக்குப்படுக்கையில் (ஸ்டிரச்சர்) விமானத்தில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு ஆம்புலன்சு வேன் மூலம் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வளர்ப்பு மகன் கோடிலிங்கம் (இவர் கிருபானந்த வாரியாரின் தம்பி மகன்) வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வாரியாரின் உடல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டது. ஏராளமான அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பக்தர்கள், வியாபாரிகள், பிரமுகர்கள் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் நெடுஞ்செழியன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கிருபானந்த வாரியாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண்கள் கலங்கின. வாரியாரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். முன்னாள் மேல் சபை தலைவர் ம.பொ.சிவஞானம், வைகோ, குமரிஅனந்தன் உள்பட பல தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அனுதாப செய்தியில், “முருகப்பெருமானின் பெருமைகளைப் பரப்பு வதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் மறைவு ஆன்மீகத் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்” என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில், “ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.

கிருபானந்த வாரியாரின் சொந்த ஊர் வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூர் ஆகும். அங்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே சரவண பொய்கை குளம் என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. மழை கொட்டியது. அதை பொருட்படுத்தாமல் குடைகளை பிடித்துக்கொண்டு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்களும் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினார்கள்.

சினிமா பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், வாரியார் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். “வேல் உண்டு வினை தீர்க்க மயில் உண்டு” என்ற பாடலை வாரியார் உடல் அருகே இருந்து மனம் உருக பாடினார். அருணகிரி நாதரின் பாடல்களையும் அவர் தொடர்ந்து பாடினார். மாலையில் வாரியார் உடல் இறுதி ஊர்வலம் புறப்பட்ட முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் சரவண பொய்கை மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது. இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். வாரியார் உடலை அங்கு 6 அடி ஆழம், 5 அடி அகலத்தில் வெட்டப்பட்ட குழியில் இறக்கினார்கள்.அங்கு கூடியிருந்தவர்கள் சிவ புராணம் பாடினார்கள். பின்னர் அந்த குழியில் விபூதி, உப்பு, செங்கல் தூள் ஆகியவற்றை நிரப்பினார்கள். அதன் மேல் பகுதியில் 6 கருங்கல் பலகையை பரப்பி அதன் மீது சிமெண்டால் பூசினார்கள். கிருபானந்த வாரியார் 6 மணிக்கு சமாதி நிலையை அடைந்ததாக அறிவிக்கப்பட்டது

©️✍️கட்டிங் கண்ணையா

error: Content is protected !!