பேரறிவாளன், சாந்தன், முருகன் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு!
ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர், கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். இவர்கள் சார்பில், ராம்ஜெத்மாலினி வாதாடினார். இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு இன்று அளித்த.விளக்கத்தில், ‘கருணை மனு தாமதமானதை சுட்டிக்காட்டி தண்டனையை குறைக்க கூடாது. உள்துறை அமைச்சர்கள் மாறியதால் கருணை மனு மீதான முடிவு தாமதமானது. மனுதார்கள் எந்த மன வேதனையிலும் இல்லை. எனவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கூடாது,’ என்று கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதம் முடிவடைந்துள்ள நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகிய கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் பேரறிவாளன் உள்பட 3 பேரின் தரப்பில் கடந்த 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. அப்போது, வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, 11 வருடங்கள் 4 மாதங்கள் கருணை மனுக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் தாமதம் செய்ததற்கு மத்திய அரசு எந்த விளக்கமும் காரணமும் கூற முடியாது. உள்துறை அமைச்சகத்ணில் 5 வருடங்கள் 6 மாதம் கருணை மனுக்கள் எந்த அசைவும் இல்லாமல் இருந்தன. அதுபோலவே, குடியரசுத் தலைவரடம் 5 வருடங்கள் 6 மாதம் எந்த நகர்வும் இன்றிக் கிடந்தன. நியாயப்படுத்த முடியாத இந்தக் காலதாமதம் ஒன்றே இந்த மூவரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அடிப்படையாகும்” என வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் வாதம் இன்று தொடங்கியது. அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி வாதத்தை தொடர்ந்தார். அப்போது, கருணை மனு காலதாமதத்தால் மூவரும் மனஅழுத்தத்தில் இருக்கவில்லை என்றும், சிறையில் மூவரும் இயல்பான மனநிலையில் இருந்ததாகவும் வாதிட்டார். கருணை மனு மீது முடிவு எடுக்க தாமதமானதற்கு காரணங்கள் உள்ளன என்றும், உள்துறை அமைச்சர்கள் மாறுவதால் மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஆனது என்றும் வாஹன்வதி வாதிட்டார்.வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேரின் தண்டனையை குறைக்க கூடாது என்றும், குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.மூன்று பேரும் சித்ரவதைக்கோ, மனவேதனைக்கோ ஆளாகவில்லை என்று கூறிய வாஹன்வதி, கருணை மனு தாமதத்தை காரணம் காட்டி தூக்குத் தண்டனையை குறைக்க கூடாது என்றும் வாதிட்டார்.இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.


