தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 7 நீர் நிலைகள் முற்றிலும் மாயம்!- மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 7 நீர் நிலைகள் முற்றிலும் மாயம்!- மத்திய அரசு தகவல்

மிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 7 நீர் நிலைகள் முற்றிலும் மாயமானது செயற்கை கோள் தகவல் வாயிலாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக 1970– 80 காலகட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விவரப்படி தமிழகத்தில் 39,202 நீர்நிலைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போதும் இந்தக் கணக்கைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள 39,202 கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன’ என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் தகவல். ஆனால் இதற்கும் மேல் காணாமல் போயிருக்கும் என்கிறார்கள் தமிழக நீரியல் வல்லுநர்கள். 1906-ம் ஆண்டு, கணக்கீட்டின்படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப்பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உட்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டின்படி அது 43-ஆகச் சுருங்கிவிட்டது. அதாவது, 96 சதவிகிதம் நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை. மதுரையில் 44 பெரிய கண்மாய்கள் இருந்த நிலையில் இன்றைக்கு எத்தனை இருக்கின்றன? தமிழகமெங்கும் இதே நிலைதான்.ஆக்கிரமிப்புகளால் பல ஏரி, குளங்கள் கல்லுாரிகளாகவும், தொழிற்சாலைகளாகவும், பேருந்து நிலையங்களாகவும், சொகுசு மால்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன. இதில் “பெரும்பாலான குளங்கள் அரசுத்துறை சம்மந்தப்பட்ட அமைப்புகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்ற நீர்வள நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இச்சூழலில் நாடு முழுதும் உள்ள நீர் நிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து, தொலையுணர்வு செயற்கைகோள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோ நிறுவனம், இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2018 வரையிலான 10 ஆண்டுகளில், நாடு முழுதும் நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விரிவான அறிக்கையை, இந்த மையம் இந்திய அரசுக்கு அளித்துள்ளது.

நிர்வாக ரீதியான பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின், மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், பிப்ரவரி 3 ந்தேதி இந்த அறிக்கையை வெளியிட்டது. இதிலுள்ள தகவல்கள் அடிப்படையில், நீர் நிலைகள் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்ள, மாநிலங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில், நாடு முழுதும் 2.31 லட்சம் நீர் நிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை, 20 வகைகளாக பட்டியலிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தமிழ்நாட்டில், 26 ஆயிரத்து 883 நீர் நிலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 10 ஆண்டுகளில், 301 ஏக்கர் பரப்பளவுள்ள ஏழு நீர் நிலைகள் முற்றிலும் மாயமாகி உள்ளதும், 10 வகையான நீர் நிலைகளில், 4,386 ஏக்கர் பரப்பளவு குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!