டெல்லியில் காற்றின் தரம் படு மோசம் :சோனியா காந்தி ஜெய்ப்பூர் போய் தங்க ஏற்பாடு!
டெல்லியில் விஷக் காற்றுதான் பரவுகிறது என்று கூறும் அளவுக்கு காற்றின் தரக் குறியீடு (AQI) ‘மிகவும் மோசமான’ பிரிவில் உள்ளது. தற்போது காற்றின் தரக்குறியீடு 406 என்ற புள்ளியில் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்துள்ளது. இதனால், பொது மக்கள் மூச்சுத்திணறல், சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார். டாக்டர்களின் அறிவுரையின்படி டெல்லியில் காற்றின் தரம் மேம்படும் வரை ஜெய்ப்பூர் சென்று தங்க உள்ளார். அவரை,அவரது மகன் ராகுல் உடன் சென்று ஜெய்ப்பூரில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார் என தெரிகிறது.
கடந்த ஜனவரி மாதம், சுவாச பிரச்சினை காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். பிறகு கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்கு பிறகு வீடு திரும்பியிருந்தார்.
டெல்லியில் காற்றின் தரம் மோசமானதன் காரணமாக, சோனியா வேறு நகருக்கு செல்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் 2020ம் ஆண்டும், மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்று அவர் கோவாவில் சில நாட்கள் தங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.