இலங்கையில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2-ஆகப் பதிவு!
இலங்கைக்கு தென்கிழக்கே 800 கி.மீ தொலைவில், இந்தியப் பெருங்கடலில் 10 கி.மீ ஆழத்தில் நடுக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2-ஆக பதிவாகி இருந்தது. தலைநகரமான கொழும்பூவில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து அலறியடித்து வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மதியம் 12.31 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால், `தற்போதைய நிலையில், எந்தவித ஆபத்தும் இல்லை’ என்கின்றன புவியியல்துறை வட்டாரங்கள்
இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “கொழும்புவுக்கு தென் கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2-ஆக பதிவாகியுள்ளது”, என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி அபாயம் ஏற்படுமென பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால், தற்போதைய நிலையில் எந்த வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை திரிகோணமலை பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது.திரிகோணமலை, கந்தளாய் அருகேயுள்ள கோயில் கிராமம், முள்ளிப்பொத்தானை ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் எந்த வித சேதங்கள் ஏற்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.இலங்கையில் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நேற்று தெற்கு சூடான்-உகாண்டா இடையேயான எல்லையைச் சுற்றியிருக்கும் பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்திருக்கிறது. கடந்த திங்கள்கிழமை மாலை தஜிகிஸ்தானில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.