சர்வதேச மணல் சிற்ப போட்டியில் முதல் பரிசு வென்ற இந்தியர் சுதர்சன்!

அமெரிக்காவில், மணல் சிற்பங்கள் செய்பவர்களுக்கு ஆண்டு தோறும் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சர்வதேச மணல் சிற்ப போட்டி-2014 சமீபத்தில் அட்லான்டிக் நகரில் நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜூன் 19ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் தனிநபர் மற்றும் இருவர் இணைந்து மணல் சிற்பம் செய்யும் போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா சார்பில் ஒடிசாவைச் சேர்ந்த கலைஞர் சுதர்சன் பட்நாயக் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றார்.
இவர் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்ப போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். 37 வயதான பட்நாயக்குக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. சமுதாய விழிப்புணர்வோடு, மக்களின் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து இவர் செய்யும் மணல் சிற்பங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள், 10 டன் மணல் கொண்டு, 30 மணி நேரத்தில் மணல் சிற்பம் செய்ய வேண்டும். இதில் தனிநபர் மணல் சிற்ப போட்டியில் ‘‘மரங்களைக் காப்போம்: உலகை காப்போம்’’ என்ற தலைப்பில் சுதர்சன் பட்நாயக் வடித்த சிற்பத்துக்கு பரிசு தரப்பட்டது. இந்த பரிசை அட்லான்டிக் நகரின் மேயர் இவருக்கு அளித்தார். இரட்டையர் போட்டியில் சுதர்சன், மேத்யூ ராய் டிபர்ட் உடன் இணைந்து செய்த சிற்பத்துக்கு 5வது பரிசு கிடைத்துள்ளது.