அதானியின் ஒரு நாள் வருமானம் கடந்த ஆண்டில் ரூ.1612 கோடியாமில்லே!
கடந்த 10 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை வீழ்த்தி பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் அதானி. கடந்த ஓர் ஆண்டில் தினந்தோறும் ரூ.1612 கோடி மதிப்பிலான சொத்துக்களைச் சேர்த்துள்ளார் கெளதம் அதானி. தற்போது, ரூ.10,94,400 கோடி சொத்துக்களுடன், அதானியின் நிகர மதிப்பு இப்போது அம்பானியை விட 3 லட்சம் கோடி அதிகமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற அடையாளத்தை வைத்திருந்த அம்பானி, தற்போது ரூ.7.94 லட்சம் கோடி சொத்துக்களுடன் இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அம்பானியின் சொத்து மதிப்பு 11 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில், தினந்தோறும் ரூ. 210 கோடியை அவர் தனது செல்வத்தில் சேர்த்ததால், அதானிக்கு அடுத்தபடியாக முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2012ல், அதானியின் சொத்து அம்பானியின் சொத்து மதிப்பில் ஆறில் ஒரு பங்காக கூட இல்லை. மேலும் கடந்த ஆண்டு, அதானியின் சொத்துக்களை விட அம்பானி ரூ. 1 லட்சம் கோடி முன்னிலையில் இருந்தார்.
ரூ.41,700 கோடி சேர்த்து, தடுப்பூசி மன்னன் சைரஸ் பூனவல்லா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் குடும்பம் ரூ.1.85 லட்சம் கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்தையும், 15 வது இடத்தில் இருந்த ராதாகிஷன் தமானி 5 வது இடத்தையும், அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானியின் சகோதரர் வினோத் ஷால்திலால் அதானி 49 வது இடத்தில் இருந்து 6 வது இடத்துக்கும் முன்னேறி உள்ளார். எஸ்.பி. இந்துஜா குடும்பம், எல்.என். மிட்டல் குடும்பம் அதற்கு அடுத்த இடங்களை பிடித்துள்ளனர். ஃபார்மா அதிபர் திலீப் ஷாங்வி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் அதிபர் உதய் கோடக் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்துள்ளனர்.
அதே நேரத்தில் ஜெய் சவுத்ரி மற்றும் குமார் மங்கலம் பிர்லா முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்தியாவில் இந்த ஆண்டு 221 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை விட 16 பேர் குறைந்துள்ளனர். முதல் 10 இடங்களில் உள்ள இந்த தொழில்முனைவோர் அந்தந்த துறைகளில் உலகளாவிய தலைவர்களாக விளங்குவதாக ஹுருன் அறிக்கை கூறியுள்ளது.