மகன், மனைவியை கைவிட்டு விட்டேனா? – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதில்..!

ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனையும், தன்னையும் 2020-ஆம் ஆண்டு நிர்க்கதியாக விட்டுச் சென்று விட்டதாக ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி அளித்த புகார் பரவிய நிலையில் ‘நான் பிரமிளாவையும் எனது மகனையும் பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது கற்பனை. அவர்கள் என்னை விட பணக்கார வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு ஆதரவை தருகிறேன். நான் எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் ஆதரித்து வருகிறேன், நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்று ஸ்ரீதர் வேம்பு பதிலளித்து இருக்கிறார்.
உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான Zoho நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்த்து வந்தார். பின்னர் 2020ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டார். இங்கிருந்து கொண்டு தனது பணியைக் கவனித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனையும், தன்னையும் 2020-ஆம் ஆண்டு நிர்க்கதியாக விட்டுச் சென்று விட்டதாக ஸ்ரீதர் வேம்புமீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இந்த செய்தியை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதில் புகார் கூறும் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன், “என்னுடைய கணவரும் நானும் 29ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்தோம். எங்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தை உள்ளது. ஆனால் இப்போது என்னையும், தனது மகனையும் ஸ்ரீதர் வேம்பு கைவிட்டுவிட்டார். அவர் எங்கள் இருவரையும் கவனித்துக் கொள்ளவே இல்லை. எங்களுக்கு பொதுவாக இருந்த சொத்துக்களை அவரது சகோதரி மற்றும் சகோதரி கணவர் பெயருக்கு வேம்பு மாற்றிவிட்டார்.கலிபோர்னியாவின் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் சொத்துக்களைக் கணவர் விற்க முடியாது. வேம்பு தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை மாற்றியது சட்டவிரோதமானது” என தெரிவித்துள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் ’எனது வணிக வாழ்க்கையை விட தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. எனது மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் பாதிப்பு எங்கள் வாழ்க்கையை சிதைத்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனச் சோர்வடையச் செய்தது. நானும் எனது மனைவியும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிசத்திற்கு எதிராக போராடி வருகிறோம். பிரமிளா ஒரு சூப்பர் மதர். எங்களது மகனின் ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த வேண்டும் என்பதே அவரின் முக்கிய நோக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக தங்கள் திருமண வாழ்க்கையின் முடிவு ஒரு புதிய மோதலைக் கொண்டு வந்ததாக கூறியுள்ள அவர், “சோஹோ நிறுவனத்தில் என்னுடைய உரிமை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். நிறுவனத்தில் உள்ள எனது பங்குகளை நான் வேறு யாருக்கும் மாற்றியதில்லை.
நான் பிரமிளாவையும் எனது மகனையும் பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வது கற்பனை. அவர்கள் என்னை விட பணக்கார வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு ஆதரவை தருகிறேன்., என் மனைவியையும், மகனையும் தமிழ்நாட்டுக்கு என்னுடன் வர வேண்டும் என சொன்னேன். ஆனால் அவர்கள் வரவில்லை. அங்கேயே உள்ளனர். நான் அவர்களைக் கைவிடவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.