இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கு Bro…!
அரசியல் சிங்கங்களுக்கானது மட்டுமில்லை விஜய் சார், உண்மையான அரசியல் அஞ்சி நடுங்கி அதிகாரத்தின் அரசியலில் சிக்கி சிதைந்து ஒடுங்கிப் போன எலிகளுக்குமானது Bro…
மக்களுக்கான அரசியலை செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லும்போது நான் சிங்கம், புலி என்றெல்லாம் கர்ஜனை செய்வது மறுபடியும் அதிகாரத்தின் அரசியல்தான். அரசியல்படுத்துதல் என்பது “நண்பனே, நீயும் நானும் சமமானவர்கள், எனக்கான வாழும் உரிமையும், பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகளும் உனக்குமானது” என்று தோழமை காட்டுவது. ஆகவே தோழர் விஜய், அரசியல் மேடைகளில் இந்த சுய கர்ஜனைகளை விட்டுவிட்டு தாழ்மையோடும், பணிவோடும் பேசுவதற்குப் பழகுங்கள். அதிகாரத் தோரணைகளில் பேசிப் பேசித் தான் பல அரசியல்வாதிகள் மக்களை பகடைக்காய்களாக மாற்றினார்கள். மறுபடி இன்னொருவரா?

திடீர் திடீரென்று ஆங்கிலத்துக்குத் தாவி விடுகிறீர்கள்! மொழிப் பாசிசம், அனைவருக்கும் தெரிந்த, அழகிய தமிழிருக்க ஏதோ ஒன்றிரண்டு சொற்கள் என்றால் சரி, தொடர்ந்து நிமிடக் கணக்கில் ஆங்கிலம் பேசுவது கொஞ்சம் சினிமாத்தனமாக இருக்கிறது, Avoid Bro…!அலங்காநல்லூர் பெருமை எல்லாம் சரிதான், இருந்தாலும், வீரம் விளைந்த மதுரை மண், அது இது என்று வழக்கமான சல்லி அடிக்காதீர்கள்…!
பெரும்பான்மையான மக்கள் இப்போதெல்லாம் மண் பெருமை போன்ற ஹைதர் அலி காலத்து விஷயங்களை விரும்புவதில்லை, கூடவே அதில் கொஞ்சம் சாதிப்பெருமையும் கலந்து கிடப்பதால் ஒடுக்கப்பட்ட எளிய மக்கள் அதை ரசிப்பதில்லை.தேமுதிக அநேகமாக தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது போலிருக்கிறது, விஜயகாந்த் மீது விஜய் காட்டுகிற அதீத மேடைப்பாசம் பின்னணியில் நடக்கும் பேச்சுவார்த்தைகளை நினைவுபடுத்துகிறது.
ஆனால், பிரேமலதாவின் அரசியல் மொழியையும், உடல்மொழியையும் இப்போதெல்லாம் பெரிய அளவில் யாரும் ரசிப்பதில்லை Bro… கொஞ்சம் மாநாடு மாதிரியான பெரிய அளவிலான கூட்டங்களில் நீங்கள் ஏதாவது பரிமாற வேண்டும் விஜய், ஏறத்தாழ 3 லட்சம் பேர் கூடி இருக்கிற, முதல்நாளே வந்து பெரும் போராட்டமாக வந்து சேர்கிற உங்கள் ரசிகர்களுக்கு, உங்கள் கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது சொல்ல வேண்டும்…!
குறைந்தபட்சம் கலை நிகழ்ச்சி போலாவது ஆட்டம், பாட்டம் என்று அவர்களுக்கு அரசியல் உள்ளீடு கொடுக்க வேண்டும், சடங்கு போல நான்கைந்து பேர் பேசினார்கள். பிறர் பேசுவதைக் கேட்க மாட்டார்கள்தான் உங்கள் ரசிகர்கள், அவர்களுக்கு இன்னும் வயதும், முதிர்ச்சியும் கூட வேண்டும், ஆனாலும், அவர்களை அப்படியே விட்டு விட முடியாதல்லவா? முதிர்ச்சியான ஆலோசகர்கள் மாநாடு மாதிரியான விஷயங்களுக்கு உங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும்.
ஒற்றைக் குரல்தான், ஒற்றை முகம்தான், ஆனாலும், மேடைகளில் ஏதோ மைக் செட்டுக் காரர்களை போல அங்குமிங்கும் அலையும் உங்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது…!உங்கள் ரசிகர்களுக்கோ, தொண்டர்களுக்கோ அது பெரிதாகத் தெரியாது, ஆனால், தொலைவில் இருந்து உங்களைக் கவனிக்கிற பொது வாக்காளருக்கு இதெல்லாம் கூச்சமாக இருக்கும்…..கவனம் Bro…!
உங்கள் பேச்சையாவது கேட்க வையுங்கள், முதல் பத்துப் பதினைந்து வரிசை முழுக்க உங்களைப் படமெடுக்கத்தான் தாவிக் குதிக்கிறது, நீங்களோ அதிதீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள்…!மீண்டும் கொள்கை எதிரி பாரதீய ஜனதா, அரசியல் எதிரி திமுக என்று தெளிவாகப் பேசினீர்கள், போதாதென்று ஆர்.எஸ்.எஸ் அடிமைகள் என்று நீங்கள் பேசியது நெஞ்சைக் குளிர வைத்தது…!

அதுவுமில்லாமல் ஜீயைக் குறி வைத்து நாலு சாத்து சாத்தினீர்கள், ஜீயின் விசுவாசிகள் உங்கள் மீது பாய்ந்து குதறுவார்கள், அது ஒரு நல்ல சகுனம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மோடிஜீயின் ரசிகர்கள் யாரைக் குறி வைக்கிறார்களோ அவர்கள் வளர்கிறார்கள் அல்லது பாஜகவின் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறார்கள் என்பது பொருள். Wishes Bro…!இஸ்லாமியர்களைக் குறிவைக்கும் சங்கிப் பிரதமரை பெயரைக் குறிப்பிட்டுக் குறிப்பிட்டு அடித்தது செம Bro…!
ஆனால், கச்சத்தீவு மீட்பு ரொம்பவே “அவுட் ஆஃப் சிலபஸ்”, மீனவர்களைக் காப்பாத்துடா என்று நேரடியாக ஜீயைக் கேளுங்கள், நீட்டை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். எம்.ஜி.ஆரை ரொம்பவே இழுத்து அதிமுக தொண்டர்களின் மனதைக் குளிர வைக்கப் பார்க்கிறீர்கள், ஆனால், ஐயன்மீர், தமிழகத்தில் ஊழலை வேற லெவலுக்கு எடுத்துக் போனது ஐயா எம்ஜிஆர் தான், எம்.ஜி.ஆரின் பினாமிகள் தான் இன்றைக்கும் தமிழகத்தின் மிகப்பெரிய நிதிப் பண்ணையார்கள்.
திமுகவுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் ஒரு மெல்லிய இழை போலிருக்கும் உறவைக் குறித்து உரக்கப் பேசினீர்கள், அங்கிள், அங்கிள் என்று நீங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அழைத்தபோது உள்ளபடியே நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் குடும்பத்துக்கும், கலைஞர் குடும்பத்துக்கும் இருக்கும் மெல்லிய இழைபோலோடும் உறவு குறித்து பாவம் உங்கள் அப்பாவித் தொண்டர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை…அட விடுங்க Bro…!
கடைசியில் நீங்க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் போறேன்னு சொன்னப்ப, உடல் சிலிர்த்து விட்டது, அடடா, இதாண்டா இன்னும் 15 நாளைக்கு தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் Youtube கன்டென்ட் என்று நிமிர்ந்து அமர்ந்தால்… அந்தப் பழைய கிராமபோன் பாட்டைப் போட்டு எல்லாத் தொகுதியிலும் விஜய் தான் வேட்பாளர் என்று தனி ஆவர்த்தனம் வாசித்தீர்கள், அரசியல் என்பது கூட்டாஞ்சோறு நண்பா…!ஒவ்வொரு வேட்பாளரின் திறனும், உழைப்பும் மிக முக்கியமானது, எல்லாத் தொகுதியிலும் நீங்கள் நிற்பதற்கு ஏன் அந்தப் பரிதாப ஜீவன்கள். அதுலயும் அந்தக் கிழக்கு மாவட்டம் தூங்கியே பல நாள் ஆகி இருக்கும் போல…!
இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கு Bro…நீங்க. உங்கள் தொண்டர்களைப் போலவே, உங்களுக்கும் அரசியல் முதிர்ச்சியும், அரசியல் அறிவும் வளர்வதற்கு இன்னும் ஒன்றிரண்டு தேர்தல்கள் ஆகலாம். மறக்காமல், ஆர்.எஸ்.எஸ்ஸையும் சங்கிகளையும் அடிப்பதை நன்றாகப் பழகுங்கள்…!
வாழ்த்துகள் Bro…


