உலகச் சிந்தனை தினம்: மாற்றத்தை உருவாக்கும் ஒரு பொறி!

உலகச் சிந்தனை தினம்: மாற்றத்தை உருவாக்கும் ஒரு பொறி!

நல்ல எண்ணம் ஒரு சிறு தீக்குச்சி போன்றது; அது ஒரு விளக்கை மட்டும் ஏற்றி வைக்காமல், இருளாக இருக்கும் ஒரு பெரிய அறையையே வெளிச்சமாக்கும் வல்லமை கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22-ஆம் தேதியை உலகச் சிந்தனை தினமாக (World Thinking Day) நாம் கொண்டாடுகிறோம். இது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல, நம் சிந்தனைகளைச் சீரமைத்து, உலகை மேம்படுத்த ஒன்றிணையும் ஒரு உன்னத நாள்.

இந்தத் தேதியின் பின்னணி என்ன?

இந்தத் தினத்தின் தொடக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பே அமைந்துவிட்டது. 1926-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பெண்களுக்கான வழிகாட்டி மற்றும் ஸ்கவுட் இயக்கத்தின் 4-வது உலக மாநாட்டில், உலகம் முழுவதும் உள்ள சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்காக ஒரு சிறப்பு விழிப்புணர்வு நாளை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த லார்ட் பேடன் பௌல் மற்றும் அவரது மனைவி லேடி பேடன் பௌல் ஆகிய இருவருமே பிப்ரவரி 22-ஆம் தேதி பிறந்தவர்கள். அவர்களின் நினைவாகவும், கௌரவமாகவும் இதே நாளைத் தேர்ந்தெடுத்தனர். 1932-ஆம் ஆண்டு ஐ.நா. சபை இதற்கு அங்கீகாரம் வழங்கிய பிறகு, இது உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிந்தனை: கண்டுபிடிப்புகளின் ஆணிவேர்

“ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது?” என்ற ஐசக் நியூட்டனின் ஒற்றைச் சிந்தனைதான், இன்று நாம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கும், கையில் இருக்கும் அலைபேசி வழியாக உலகத்தோடு இணைந்திருப்பதற்கும் அடிப்படை.

  • சிந்தனை: புவியீர்ப்பு விசை ஏன் இருக்கிறது?

  • மாற்றம்: புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட முடியுமா?

  • வெற்றி: நிலவில் மனிதன் கால் பதித்தது மற்றும் விண்வெளி ஆராய்ச்சி.

ஆரோக்கியமான சிந்தனை எது?

நம்மிடம் தோன்றும் எண்ணங்களே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.

  • சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கூட பெரிய சுமையாக நினைப்பவர்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்.

  • அதே சமயம், “இதுவும் கடந்து போகும்” என்று நேர்மறையாக நினைப்பவர்கள் ஆரோக்கியமான மனநிலையைப் பெறுகிறார்கள்.

  • பிரச்சினைகளைத் தீர்வாக மாற்றுபவர்கள்தான் உலகத்தையே மாற்றும் ‘உலகளாவிய சிந்தனையாளர்கள்’ (Global Thinkers) ஆகிறார்கள்.

“நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்” – சுவாமி விவேகானந்தர்

நம்முடைய எண்ணங்களை நாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். ஏனென்றால்:

  1. எண்ணங்கள் வார்த்தைகளாக மாறும்.

  2. வார்த்தைகள் செயல்களாக மாறும்.

  3. செயல்கள் பழக்கங்களாக மாறும்.

  4. பழக்கங்கள் நம் பண்பை உருவாக்கும்.

  5. பண்பே நம் வாழ்க்கையாக மாறும்.

இந்த உலகச் சிந்தனை தினத்தில், சுயநலமற்ற, ஆக்கப்பூர்வமான மற்றும் அன்பான சிந்தனைகளை வளர்த்தெடுப்போம். அதுவே ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதல் படி!

வாத்தீ அகஸ்தீஸ்வரன்