தண்ணீர்க் குடுவையை கையாள்வதற்கு உரிய வழிகாணுமா செயற்கை நுண்ணறிவு?

தண்ணீர்க் குடுவையை கையாள்வதற்கு உரிய வழிகாணுமா செயற்கை நுண்ணறிவு?

மாந்தர் வரலாற்றில் இதுவரைக்கும் வடிவமைக்கப்பட்ட பொருள்களிலேயே வணிகத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெரிய தண்ணீர்க் குடுவைதான் தூக்குவதற்குப் பிடிமானமற்ற, பயன்பாட்டுத் தோழமையற்ற, ஈவு இரக்கமற்ற கொடிய பொருளாகும். எண்ணிப் பாருங்கள், ஏறத்தாழ இருபது முகவை அளவிற்குத் தண்ணீரால் நிரம்பியிருக்கும் அந்நெகிழிக் குடுவையைச் சேர்ப்பனையாளர் பல நிலைகளில் தூக்கிச் சென்று இடுகிறார். ஒரு கணக்காகக் கட்டியணைத்துச் சேர்த்தெடுத்துத் தம் தோளில் இருத்தி நடக்கிறார்.

பயன்படுத்துவதன் பொருட்டு நாமும் அக்குடுவையைத் தூக்கி ஊற்றவேண்டிய, குழாய்க் கீழ்க்குடுவையில் கவிழ்த்துப் பொருத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கு எவ்வகையான உதவிப் பொருத்தமும் இல்லாத, மொழுக்கையான குடுவை இது. ஏனோதானோ என்று தூக்கினால் நழுவி விழும். தூக்கி நகர்த்தும்போது, ஊற்றும்போது முதுகெலும்பு முதல் காலெலும்பு வரை சுளுக்கிக்கொள்வதற்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு. அகவை மூத்தவரால் இதனைக் கையாளவே முடியாது.

இவ்வளவு அறிவியல் வளர்ந்திருக்கிறது என்கிறார்கள். செயற்கை நுண்ணறிவால் என்னென்னவோ கிழித்துத் தொங்கவிடப் போகிறோம் என்கிறார்கள். எடைமிக்க தண்ணீர்க் குடுவையை – கையாள்வதற்கு உதவியாகப் பிடித்தன்மை இல்லாத பொருளை – நம் காலத்தில், நம் முன்னேயே ஒருவன் ஈவு இரக்கமின்றி வடிவமைத்துப் பெரிதாகப் பரப்பியிருக்கிறான் என்றால்… அவன் நம்மை எவ்வளவு இளிச்சவாயர்களாகக் கருதுகிறான், பாருங்கள் ! அதனையும் ஏற்றுக்கொண்டு வாய்மூடிகளாய்ப் பேசாமடந்தைகளாய்த்த் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமே, நம்மை என்னவென்பது ?

இதே பயன்பாட்டு உதவியற்ற பொருளாகத்தான் எரிவளியுருளையும் உள்ளது, என்றாலும் அதற்காவது மேல்விளிம்பில் கையாள்வதற்கு உதவத் தக்க வளையம் உண்டு. தண்ணீர்க் குடுவைக்கு எவ்வகைப் பிடியுதவியும் அறவே கிடையாது. என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் நாம் ! மக்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்ற அக்கறையற்ற, வணிகமே நோக்கான, பயன்பாட்டுத் தோழமையற்ற ஒரு பொருள் நம் அன்றாட வாழ்வில் தொடர்ந்து இடம்பெற்றுவிட்டதே ! எப்படி இப்பொருளைப் பொறுத்தேற்றோம் ?

-கவிஞர் மகுடேசுவரன்

error: Content is protected !!