தமிழ் குரல் / AI Voice
நகரங்கள் என்றாலே வானத்தைத் தொடும் கட்டிடங்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, மும்பையில் மட்டும் ஏன் பெரும்பாலான கட்டிடங்கள் குள்ளமாகவே இருக்கின்றன? இம்மாநகரங்களில் ஒரு பழைய நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் ஒரு நான்கு மாடி கட்டிடமே உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கும், பக்கத்திலேயே மெட்ரோ ரயில் நிலையம் வந்திருக்கும், ஆனாலும் ஏன் அந்தக் கட்டிடம் உயரவில்லை? அதேபோல், அலுவலகங்கள் நகரத்தின் ஒரு மூலையிலும், வீடுகள் 15 கிலோமீட்டர் தள்ளியும் அமைந்து, தினசரி பயணமே ஒரு நரகமாக மாறுவது ஏன்? இதற்குப் பின்னால் இருக்கும் அந்த ‘வில்லன்’ பெயர்தான் FSI (Floor Space Index). இது ஒரு டெக்னிக்கல் வார்த்தை போலத் தெரிந்தாலும், உங்கள் வீட்டு வாடகை முதல் டிராஃபிக் நெரிசல் வரை அனைத்தையும் இதுதான் தீர்மானிக்கிறது.
என்ன இந்த FSI லொட்டு லொசுக்கு?
ரொம்ப சிம்பிளா சொல்லப்போனால், உங்க நிலத்துல எவ்வளவு பெரிய கட்டிடம் கட்டலாம் என்கிற கணக்குதான் இது.

உதாரணமாக, உங்ககிட்ட 1000 சதுர அடி நிலம் இருக்கு. அங்க FSI 1.5-னு அரசு சொன்னா, நீங்க மொத்தம் 1500 சதுர அடி வரைக்கும் தான் கட்டிடம் கட்ட முடியும். நீங்க அதை ஒரே மாடியா கட்டினாலும் சரி, ரெண்டு மாடியா கட்டினாலும் சரி… அந்த 1500-ஐத் தாண்டக் கூடாது.
இந்திய நகரங்களுக்கு வந்த சோதனை
உலக நகரங்களான நியூயார்க் அல்லது லண்டனில் இந்த FSI அளவு 10-க்கும் மேல் இருக்கும். ஆனால் நம்மூரில் இது வெறும் 1.2 முதல் 2.75 வரை தான் இருக்கிறது. இந்தத் தடையால் ஏற்படும் தலைவலிகள் இதோ:
-
நெரிசலில் சிக்கிய வாழ்க்கை: நகரத்தின் மையத்தில் மாடிகளை உயர்த்த அனுமதி இல்லாததால், மக்கள் நகருக்கு வெளியே 15-20 கி.மீ தள்ளிப் போய் குடியேறுகிறார்கள். இதனால் தினமும் 2 மணிநேரம் டிராஃபிக்கில் அல்லாட வேண்டியுள்ளது.
-
சேரிகளின் உருவாக்கம்: மும்பை போன்ற இடங்களில் இடம் பற்றாக்குறை இருந்தும், மாடிகளைக் கட்ட அனுமதி தராததால் தான் மக்கள் நெருக்கடியான பகுதிகளில் (தாராவி போல) வாழ வேண்டிய சூழல் உருவானது.
-
பொருளாதார இழப்பு: பெங்களூருவில் மட்டும் இந்தத் தவறான திட்டமிடலால் ஏற்படும் நேர விரயத்தால் ஆண்டுக்கு சுமார் ₹20,000 கோடி இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
தீர்வை நோக்கி…
இப்போது மெல்ல மெல்ல விழிப்புணர்வு வந்துள்ளது. சில நகரங்கள் இதற்காகப் புது வழிகளைக் கையாள்கின்றன:
-
பெங்களூரு: சாலை அகலத்திற்கு ஏற்ப கூடுதல் மாடிகள் கட்ட ‘பிரீமியம் FSI’ முறையை அறிமுகம் செய்துள்ளது.
-
மும்பை: பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு 4 முதல் 5 FSI வரை அனுமதித்து, நவீன வசதிகளுடன் கூடிய டவர்களை உருவாக்க வழிவகை செய்கிறது.
-
மெட்ரோ வழித்தடங்கள்: ரயில் நிலையங்களுக்கு அருகில் அதிகப் பேர் தங்கும் வகையில் ‘செங்குத்து வளர்ச்சியை’ (Vertical Growth) அரசு ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளது.
ஆந்தை பார்வை:
நமது நகரங்கள் தற்செயலாக இப்படி வளரவில்லை, அவை நமது திட்டமிடல் விதிகளால் இப்படி மாற்றப்பட்டுள்ளன. மும்பையில் நெரிசலான பழைய கட்டிடங்களுக்குப் பதில் பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்புகளும், பெங்களூருவில் நீண்ட தூரப் பயணத்திற்குப் பதில் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடுகளும் அமைய வேண்டுமானால், நாம் FSI விதிகளை இன்னும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். நகரங்கள் தானாக விரிவடைவதை விட, திட்டமிட்டு மேல்நோக்கி வளர்வதே சிறந்த எதிர்காலத்தைத் தரும்.அதாவது நாம் வெளிநோக்கி (சாலைகளில்) வளர்வதைக் காட்டிலும், மேல்நோக்கி (வானத்தை நோக்கி) வளர்வதே புத்திசாலித்தனம். அப்போதுதான் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு அமையும், பெட்ரோல் செலவு குறையும், வாழ்க்கைத் தரமும் உயரும்.
நிலவளம் ரெங்கராஜன்
