மோடியின் ஆட்சியில் இந்தியாவே மணிப்பூர்தான்!

மோடியின் ஆட்சியில் இந்தியாவே மணிப்பூர்தான்!

ரு சமூகத்தின் ஆழமான குரூரம் கூட பலர் பார்க்கும் வகையில் வெற்றிகரமாக எப்படி நிகழ்த்தப்படுகிறது? அரசியல் பொருளாதாரத்தின் உதவியால்தான்! நவம்பர் 2017-ல் கிட்டத்தட்ட 39 ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. க்ரோமைட் கனிமத்தை அகழ்ந்தெடுப்பதற்கு பல ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடப்படுகின்றன. ஷிங்க்சா, லுங்கர், ஹுந்துங், மைலியாங் என பெரும்பாலான இடங்கள் மலைப்பகுதிகளில் இருப்பவை. சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் எல்லாமும் அனுமதிகளை அள்ளி அள்ளி நிறுவனங்களுக்கு எறிந்து கொண்டிருந்தன. அந்த அமைச்சகத்துக்கெல்லாம் என்ன எழவுக்கு ‘காலநிலை’, ‘காடு’ என்ற அடைகளெல்லாம் பெயரில் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

பொதுவாய் அரசு என்கிற வடிவத்துக்கே இருக்கும் வழக்கமான குயுக்தி சுவாரஸ்யம் இங்கும் இருந்தது. இந்தத் திட்டங்கள் எதைப் பற்றியும் குறிப்பிட்ட கிராமங்களின் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவே இல்லை. அந்த கிராமங்களில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் குக்கி மற்றும் நாகா பழங்குடி இன மக்கள். 90களுக்கு பிறகு சோவியத் யூனியனை தாண்டி இந்தியாவுக்கான நட்பை உருவாக்கவும் சீனா எல்லைகளில் இருக்கும் வட கிழக்கு இந்தியப் பகுதிகளை தன் பக்கம் ஈர்த்து விடாமலிருக்கவும் ஆசிய பசிபிக் நாடுகளின் உதவியை தேடும் Look East கொள்கையை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியது. தென்கிழக்கு ஆசிய மூலதனத்தை வடகிழக்கு மாநிலங்களுக்கு ஈர்க்கும் விதத்தில் கொண்டு வரப்பட்ட Look East கொள்கை, மோடி ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டில் Act East கொள்கையாக மாற்றப்பட்டது.

‘கிழக்கை பார்க்க மட்டும் வேண்டியதில்லை, கையாளவும் வேண்டும்’ என்கிற அர்த்தத்தில் மோடி அச்சமயத்தில் பேசவும் செய்தார். மணிப்பூரின் மலைப்பகுதிகளில் இருக்கும் பழங்குடி மக்களுக்கு இந்தியாவே பிரச்சினை. இந்தியா என்கிற பெயரோ வார்த்தையோ எல்லாம் அவர்களுக்கு உவப்பான வார்த்தை இல்லை. ஏனெனில் அவர்கள் அனுமதியின்றி இந்தியாவுடன் இணைக்கப்பட்டவர்கள் அவர்கள். இந்திய அரசின் கட்டுப்பாடுகள் அவர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் சிதைப்பதாக அவர்கள் கருதினார்கள். இயல்பாகவே இருக்கும் சமவெளி மனிதர்களுடனான பழங்குடி மக்களின் அசூயை, அவர்களுக்கு இந்தியாவோடே இருந்தது. அவர்கள் தன்னிச்சையாக இயங்க விரும்புபவர்கள். தனி நாடு கோரிக்கைக்கான அரசியலும் இதன் விளைவாக அங்கு உருவானது. இந்தியா சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது மணிப்பூரின் நாகா பழங்குடியினர் இந்தியாவிடம் சுதந்திரம் கேட்டு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை ஒடுக்குவதற்கென ஆயுதப்படைச் சட்டம் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இப்பதிவில் பதிவேற்றப்பட்டிருக்கும் புகைப்படம், 2004ம் ஆண்டில் மணிப்பூர் பெண்ணான மனோரமாவை ஆயுதப்படையினர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொன்றதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் புகைப்படம். ஆயுதப்படையினர் வன்புணர்ந்ததாலேயே அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதென ஒன்றிய அரசு சாட்டையை ஒடுக்கிய கேலிக்கூத்தெல்லாம் இந்த ஜனநாயகத்தில் நடந்தது.


அடுத்தடுத்து மணிப்பூரின் பெரும்பான்மையை கொண்டு இந்தியா என்கிற கருத்துக்குள் கரைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. தனி நாடு கோரிக்கையை நீர்த்து போக வைத்து, இந்திய அரசியலுக்குள் ஐக்கியமாக்கி காணாமல் அடிக்கும் முயற்சியாக 2005ம் ஆண்டில் Suspension of Operation ஒப்பந்தத்தை இந்திய அரசு பழங்குடி போராட்டக் குழுக்களுடன் போட்டது. எல்லா ஆண்டுகளும் அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வரப்பட்டது. கிட்டத்தட்ட தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கான சுயநிர்ணய உரிமையை கோரிக்கையாக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர் பழங்குடி மக்கள். அப்போதுதான் மோடி வந்தார். ‘பார்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, கையாள வேண்டும்’ என்றார்.

காங்கிரஸ் காலத்தின் Look East கொள்கையை நவதாராளவாதத்துக்கான தொடக்க வடிவம் என புரிந்து கொள்ளலாம். மோடியின் Act East கொள்கையை நவதாராளவாதத்தின் பாசிச வடிவம் எனப் புரிந்து கொள்ளலாம். மோடி வந்ததும் முதல் கட்டமாக ஆயுதப்படை சட்டத்தை விலக்கினார். மக்கள் சந்தோசஷமடைந்தனர். மூலதன ஈர்ப்புக்காகதான் அந்த நடவடிக்கை என அப்போது தெரியவில்லை. மூலதன ஈர்ப்பின் பிரதான நடவடிக்கையாக, உவப்பான சூழல் உருவாக ஒரு பெரும் வன்முறை கட்டவிழ்க்கப்படும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

பாஜகவின் முதலமைச்சராக மணிப்பூரின் பெரும்பான்மையான மெய்தெய் இனத்தை சேர்ந்த பைரன் சிங் முன்னிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப் படுகிறார். Act East-க்கான பாசிச வடிவத்தை அவர் செய்து கொடுக்கத் தொடங்குகிறார். மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை ’ஊடுருவியவர்கள்’ என பேசுகிறார். மலைப்பகுதி கிராமங்கள் இருக்கும் பகுதியை காப்புக் காடாக அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றுகிறார். ‘வெளியே இருந்து வந்தவர்கள், நம் நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாக’ குற்றஞ்சாட்டுகிறார். மெய்தெய் மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் வேலையை செய்கிறார். மெய்தெய்கள் பழங்குடிகளாக ஆகிவிட்டால், மலை நிலங்களை கையகப்படுத்தலாம் என ஆசை காட்டுகிறார்.

பாலஸ்தீனம் தொடங்கி ஈழம் வரை, முதலாளித்துவத்தின் நில அபகரிப்புக்கு முன் நிபந்தனையாக இருந்த இன அழிப்பு தொடங்கப்படுகிறது. மோடியின் Act East கொள்கை இதுதான். மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட மோடி பேசாததும் இக்கொள்கையின் ஒரு பகுதிதான். இதுபோல் Act South, Act Tamilnadu, Act Kerala, Act Kashmir எனப் பல திட்டங்களை உலக வங்கிகள் வடித்து மோடியிடம் ஏற்கனவே கொடுத்திருக்கின்றன.

மோடியின் ஆட்சியில் இந்தியாவே மணிப்பூர்தான்!

ராஜசங்கீதன்

படம் : பாலா. ஜி

error: Content is protected !!