வாட்ஸ் அப் நியூ பிரைவசி பாலிசியை பற்றி முழுசா தெரிஞ்சிக்கிட்டீங்களா?

வாட்ஸ் அப் நியூ பிரைவசி பாலிசியை பற்றி முழுசா தெரிஞ்சிக்கிட்டீங்களா?

தற்போது 100 கோடி பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமானப் பரிமளித்திருக்கும் வாட்ஸ் அப் ஆப்பை டவுன்லோட் செய்து ஸ்மார்ட் போன்களில் வைத்துக் கொண்டு நமது நட்பு வட்டங்களோடு சாட் செய்யலாம். அதே போன்று சமூக வலைதளத்தில் முதலிடத்தை பிடித்துள்ள பேஸ்புக்கில் கணக்கு ஒன்றை தொடங்கி வைத்துக் கொண்டு நமது நட்புகளோடு அமர்களம் பண்ணலாம். தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்த இவை இரண்டும் இனி சேர்ந்து செயல்பட போகிறது. வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் இந்த 2 ஆப்களும் இனி ஒன்றிணைந்து செயல்பட போகிறது என்று வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, வாட்ஸ் அப் பயன்படுத்தும் உங்கள் செல்போன் நம்பர்கள் இனி பேஸ்புக்குடன் இணைக்கப்படும் எ ன்று அறிவித்துள்ளது.

whatappa aug 26

இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள், சலுகைகள், செய்திகளை தனிநபர் பயனாளிக்கு அனுப்ப முடியும். அதே நேரம் பயனாளிகள் அவற்றை பிளாக் செய்து கட்டுப்படுத்தவும் முடியும். வாட்ஸ் அப், வழக்கமான விளம்பரங்களைத் தடை செய்யும் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை. அதே நேரம் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர்களின் செல்பேசி எண்களை ஆன்லைனில் பதிவிடாது எனவும், விளம்பரதாரர்களுக்கு பயனர்களின் எண்கள் பகிரப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

நேற்று (வியாழக் கிழமை) தனது நிறுவனத்தின் ப்ரைவஸி கொள்கை மற்றும் சேவை விதிமுறைகளைப் புதுப்பித்துள்ள வாட்ஸ் அப், பயனர்கள் அதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் முன்னதாக 2012-ல் (ஃபேஸ்புக்குடன் இணைவதற்கு முன்பாக) சேவை விதிமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் பயனர்களில் பலரே, தங்களின் செல்பேசி எண்ணைக்கொண்டுதானே கணக்கைத் தொடங்கியிருப்பர். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற கேள்வி எழலாம். செல்பேசி மூலம் ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கியவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுதும் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்த தற்போதைய எண்ணையே அவர்கள் கொடுக்க வேண்டும். இதனால் வாட்ஸ் அப்பின் தகவல்கள் ஃபேஸ்புக்குக்கு முக்கியமானவை.

வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறையைப் பயன்படுத்தியபோது அனைத்து ப்ரைவஸி அமைப்புகளும் அதை வரவேற்றன. அதைத்தொடர்ந்து என்க்ரிப்ஷன் முறை இதிலும் தொடரும் என்று வாட்ஸ் அப் அறிவித்திருக்கிறது.

இந்த கணக்குகள் ஒருங்கிணைப்பு, தனிநபர் உரிமையைப் பாதிப்பதாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. வாட்ஸ் அப், தற்போதைய பயனாளிக்கு புதிய கொள்கையை ஒத்துக்கொள்ளவோ அல்லது சேவைப் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளவோ ஒரு மாத அவகாசம் அளித்துள்ளது. இதனிடையே தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியில் மாற்றம் செய்திருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்ற ஆப்ஷனை தெரிவு செய்துவிட்டால் அந்த செல்போன் எண் பேஸ்புக்குடன் இணைக்கப்பட மாட்டாது. இதற்கான அறிவிப்புகள் வாட்ஸ் அப் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். உங்களுடைய விவரங்களை பகிரலாமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும், எந்தக் காரணத்தை கொண்டும் செல்போன் நம்பர்கள் பேஸ்புக்கில் ஷேர் செய்யவோ, மூன்றாம் நபருக்கு கொடுக்கவோ, ஏதாவது செய்திகள் அனுப்பப்படவோ மாட்டாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட பிறகு, உங்களது வாட்ஸ் அப் மெசஞ்சருக்கு சென்று ‘செட்டிங்ஸ்’ கிளிக் செய்து ‘அக்கவுன்ட்’-ல் உள்ள ‘பிரைவஸி’ ஆப்ஷனுக்குள் நுழைந்தால் கடைசியாக ஃபேஸ்புக் இணைப்பு குறித்த பகுதி இருக்கும். அதில், டிக் ஆப்ஷனை நீக்கும் வசதியும் உள்ளது.

Related Posts