புவிசார் குறியீடு வாங்கியுள்ள குமரி ’மட்டி’ ரக வாழைப்பழத்திற்கு என்ன ஸ்பெஷல்?

புவிசார் குறியீடு வாங்கியுள்ள குமரி ’மட்டி’ ரக வாழைப்பழத்திற்கு என்ன ஸ்பெஷல்?

மிழ்நாட்டில் ஈத்தாமொழி தேங்காய், விருப்பாட்சி மலைவாழைப்பழம், சிறுமலை வாழைப்பழம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. கேரளத்தில் விளைவிக்கப்படும் நேந்தரம் பழத்துக்கும் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைகின்ற மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விளையும் வாழை பழங்களில் பெரும் பாலானவை விளையும் மாவட்டம் குமரி என்றால் மிகையில்லை. குமரி மாவட்டத்தில் செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோட்டை, பேயன், சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்புசக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல் பொதுவாக மஞ்சள் நிறத்தில்தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்புச் சுவையும் மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட் டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைபழத்தை நசுக்கி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

மட்டி வாழையை நட்ட 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோவும், அதற்கு மேலும் எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் முனைப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது.

மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார். விருந்தில் அவருக்கு குமரி மாவட்ட ஸ்பெஷல் மட்டிப்பழம் வழங்கப்பட்டது. சாப்பிட்டுப்பார்த்த அவர், ”ஆஹா..ஆஹா. அருமை..இவ்வளவு ருசியான வாழைப்பழம் நான் சாப்பிட்டதே இல்லை!” என மகிழ்ந்ததாக கூறுவார்கள். அதன்பின்பு பலமுறை அவருக்கு குமரி மாவட்ட மட்டிப்பழம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்டது.

தற்போது மட்டி வாழைபழத்துடன் திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, வீரமாங்குடி செடிபுட்டா சேலை, ஆகிய பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க்து.

error: Content is protected !!