டாஸ்மாக் பார்களை மூடணுமுன்னு சொன்னது செல்லாது – ஐகோர்ட் ஆர்டர்!

டாஸ்மாக் பார்களை மூடணுமுன்னு சொன்னது செல்லாது – ஐகோர்ட் ஆர்டர்!

மிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைகால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளும், 4500-க்கும் அதிகமான பார்களும் இருந்தன. ஆனால் அசில பல சர்ச்சைகள் காரணமாக 5,402 மதுக்கடைகள், 2,808 பார்களாக குறைந்தன. அவற்றிலும் இப்போது 5,387 மதுக்கடைகளும், 2,168 பார்களும் தான் செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில் டாஸ்மாக் பார் டெண்டர் புதிய விதிகளை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,ஏற்கனவே பார் வைத்திருந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை என்றும் நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தும் தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி சரவணன், பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களையும் ஆறு மாதங்களில் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த நீதிபதி, டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த இந்த சட்டம் அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

தனி நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், பார் உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கிற்கு அப்பாற்பட்டு இந்த உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளதாகவும், மனுதாரர்கள் யாரும் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை என்று தெரிவித்தார். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார் .

இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைகால தடை விதித்து, டாஸ்மாக் நிறுவனம் பார் நடத்த டெண்டரை கோரலாம் எனவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.