யூடியூபர் சவுக்கு சங்கர் செய்த குற்றமென்ன?

யூடியூபர் சவுக்கு சங்கர் செய்த குற்றமென்ன?

யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி இருக்கிறார். காவல்துறையில் பணி புரியும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கைதாகி கொண்டு போகும் வழியில் அவர் போன போலீஸ் ஜீப் சிறிய விபத்துக்கும் உள்ளாகி காயமுற்றிருப்பதாகவும் தெரிகிறது. லோக்கல் ஆட்களை போலீஸ் கைது செய்து லாக்கப்பில் நையப் புடைத்து விடுவார்கள். நீதிமன்றத்தில் கேட்டால் ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்து’ விட்டதாக சொல்லச் சொல்வார்கள். இதுவும் அந்த மாதிரியான ஒரு ‘விபத்தா’ என்று தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், கைது தேவைப்படும் அளவுக்கான குற்றமா இது என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவானால் மட்டும்தான் முன் கூட்டிய கைது தேவைப்படும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கிறது.++ சவுக்கு சங்கர் மீது பதிவாகிய வழக்குகள் அனைத்துமே ஏழு ஆண்டுகளுக்குக் கீழானவை.

அவரைக் கைது செய்தது போதாது என்று அவரது டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். குற்றம்: அவர்கள் கஞ்சா வைத்திருந்தார்களாம்!

சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டியின் சிறிய காணொளித்துணுக்கு பார்த்தேன். அதில் அவர் பெண் கான்ஸ்டபிள்களை அவமானப்படுத்தியதாக தெரியவில்லை. ஆண் காவல் துறை அதிகாரிகளைத்தான் சாடி இருக்கிறார். பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மாநில அளவிலான விசாரணை தேவைப்படும் கொடுங்குற்றம் என்பது தெளிவு.

ஆனால் அப்படி ஒரு புகாரை முன்வைத்ததுதான் இங்கே குற்றமாக பார்க்கப்படுகிறது. மிகவும் அவலமான அணுகுமுறை இது. நீதிமன்றத்தின் குறுக்கீட்டில் சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்பது நமக்குத் தெரிந்தது போல காவல் துறைக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்குள் கிடைக்கும் ஒரு சில நாட்களாவது அவரை உள்ளே வைத்திருக்கலாமே என்று ஆசைப்பட்டார்களா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்குக் கோபம் வந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

ஊடக சுதந்திரம் குறித்த ஒரு பன்னாட்டு ஆய்வில் இந்தியாவின் மதிப்பீடு பல தரவரிசைகள் கீழே இறங்கி இருப்பது குறித்த ஒரு அறிக்கை சமீபத்தில்தான் வெளியானது. அதை முதல்வர் ஸ்டாலின் மேற்கோள் காட்டி மோடி அரசை விமர்சனம் வேறு செய்திருந்தார். ஆனால் தனது சொந்த மாநிலத்திலேயே ஊடக சுதந்திரம் ஏறக்குறைய அதே லட்சணத்தில்தான் இருக்கிறது என்பதை அவருக்கு யாராவது சொன்னால் உபயோகமாக இருக்கும்.

தமிழ் நாட்டு காவல் துறைக்கு கண்டனங்கள்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

error: Content is protected !!