வெப் – விமர்சனம்!

வெப் – விமர்சனம்!

ர்வதேச அளவில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறவர்கள் மட்டும்தான் ஜாலியான ஆட்கள் என்ற எண்ணம் பெரும்பாலானோர் மனதில் ஆழமாக உள்ளது. ஒருவர் ஐ.டி.யில் வேலை செய்கிறார் என்றாலே, ‘ சம்பளம் நாற்பதா ஐம்பதா, லட்சத்துக்குப் போகலையா, எத்தனை கேர்ள் பிரண்ட், சனிக்கிழமை பார்ட்டி பண்ணுவீங்களா, லாஸ்ட் ட்ரிப் எங்க போனீங்க?’ என வகை தொகை பார்க்காமல் கேள்விகளை அடுக்குகிறவர்கள் அநேகர். லெளகீக உலகின் அத்தனை சுகங்களையும் அனுபவிப்பதற்கான ஒரே துறை ஐ.டி. மட்டும்தான் என்று நினைப்பதன் வெளிப்பாடுதான் அது. இப்படியான சூழலில் அவர்களிடையே ஒரு விழிப்புணர்வு படமாக. அதுவும், இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு ஒரு பதிலாகவும் இப்படம் உருவாகி இருந்தாலும் வழக்கம்போல் பெண்களுக்கு மட்டுமே வகுப்பெடுத்து பெயில் மார்க் வாங்கி விட்டார்கள்.

அதாவது ஐடியில் ஒர்க் செய்யும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் பல்வேறு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதே நிறுவனத்தில் புதிதாக வந்து சேரும் திருமணம் ஆன அனன்யா மணியை ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்று மதுப் பழக்கத்திற்கு ஆளாக்கி ஆட்டம் போட்டபடி ஒரு நாள் இரவு கார் ஓட்டிச் செல்கின்றனர். அடுத்த நாள் காலை மூவரும் போதை தெளிந்து கண் விழித்துப் பார்க்கும்போது நட்டி நட்ராஜின் கஸ்டடியில் பாழடைந்த வீட்டில் இருக்கின்றனர். நட்டி நட்ராஜ் – அவரது பெண் உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்தப் பெண்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு கொடுத்து, போதை மருந்து செலுத்தி, தூங்க வைத்து தொடர் டார்ச்சர் செய்கின்றனர். ஏற்கெனவே இந்த வீட்டில் மற்றொரு பெண்ணையும் கட்டி வைத்து அடித்து துன்புறுத்துகிறார். இடையில் சில கொலைகளையும் செய்கிறார். இந்த சூழலில் நட்டி எதற்காக இப்பெண்களைக் கடத்தினார்? இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன? சைக்கோ வில்லன் நட்டியின் பின்புலம் என்ன? இந்தப் பெண்கள் எப்படி அங்கிருந்து தப்பித்தார்கள் என்பனவற்றை விறுவிறுப்பாக சொல்ல முயன்று இருப்பதே வெப் கதை.

மது, போதை என சுதந்திரமாக அலப்பறை பண்ணி திக்குத் தெரியாமல் மாட்டிக் கொள்ளும் ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட நான்கு பெண்கள் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். நட்டி கிடைத்தக் கேரக்டரின் ஆழம் புரிந்து நடித்தாலும் ஆய்.. ஊய்.. என ஒரே மாதிரியான ரியாக்‌ஷன் கொடுத்து முதல் பாதியில் நம்மை சோதிக்கிறார். மேலும் ரஜினியை இமிடேட் செய்வது கொஞ்சமும் ஒட்டவில்லை. அதிலும் கண்ணில் மை, கன்னத்தில் தழும்பு எல்லாம் ஒட்டவே இல்லை. படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் மொட்டை ராஜேந்திரன் திடீரென படத்தில் தோன்றி காமெடி என்ற பெயரில் தன் பங்குக்கு சோதித்து விட்டு போகிறார்.

இசை கார்த்திக் ராஜாவாம்.. நம்பமுடியவில்லை.

இப்படி இளம்பெண்களை கடத்தியதற்கு பின்னணியில் ஒரு பிளாஷ்பேக் இருக்கும், அதில் நட்டி குடும்ப பெண் பாதிக்கப்பட்டவராக இருப்பார், என்ற அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டாத, அடுத்தடுத்து இதுதான் நடக்கும் என்பதை சுலபத்தில் யூகிக்க முடிகிற திரைக்கதையால் தொய்வடைய செய்து அனுப்புகிறார்கள்..

மொத்தத்தில் இந்த வெப் – தவிர்க்கபட வேண்டிய சினிமா

error: Content is protected !!