வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை கட்டணமில்லாமல் பழுது பார்க்க வேண்டுமா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை கட்டணமில்லாமல் பழுது பார்க்க வேண்டுமா?

ண்மையில் ஆடி அடக்கிய மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்களை பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாகனங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத் தயாரிப்பு, நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், டிச.8 அன்று நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலும் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி கீழ்கண்ட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டீலர்கள்: அனைத்து வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பழுதுநீக்கப்பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளன. வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம் எனவும் அவற்றின் Engine-ஐ ஆன் செய்யாமல் மீட்பு வாகனங்களில் சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டு வருமாறும் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்த வாகன உரிமையாளர்களின் அலைபேசி எண்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தொடர்புடைய நிறுவனங்கள் விரிவான பத்திரிக்கைச் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. TVS, Royal Enfield, Maruti, TATA Motors, Hyundai உள்ளிட்ட நிறுவனங்களும் New India Insurance உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களும் இத்தகைய சிறப்பு முகாம்கள் குறித்து பத்திரிகைச்ய்திகள் ஏற்கெனவே வெளியிட்டுள்ளன. Hyundai மற்றும் TATA Motors நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்கியும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்களையும் நடத்தியும் வருகின்றன.

வாகன உரிமையாளர்கள் எளிதில் தொடர்புகொள்ள Toll Free எண்கள் மற்றும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய Road Side Assistance வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. Honda மோட்டார் சைக்கிள் நிறுவனம் சென்னை முழுவதும் Mobile Service முகாம்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றது. சென்னையில் மழை பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் டிசம்பர் 18 வரையில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TVS நிறுவனம் சென்னை முழுவதிலும் 68 இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

சில நிறுவனங்கள் இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில் நடமாடும் சிறப்புக் குழுக்களை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் வாகனங்களைப் பழுதுநீக்கம் செய்வதற்குப் போதுமான அளவில் தொழில்நுட்பப் பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், தொழில்நுட்பப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்தும் கொண்டுவருதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காப்பீட்டு நிறுவனங்கள்: பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.20,000-க்கும் குறைவாக பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் அத்தகைய வாகனங்களுக்கு வாகன உரிமையாளர்கள் வழங்கும் பாதிக்கப்பட்ட வாகனங்களின் புகைப்படங்கள் மற்றும் பழுது நீக்கப்பட்டதற்கான ரசீதுகளின் அடிப்படையில் உடனடியாக அந்த இழப்பீட்டை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இழப்பீட்டினை ஆய்வுசெய்வதற்கு பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் சர்வேயர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதினால் பிற மாவட்டங்களிலிருந்து சர்வேயர்கள் வரவழைக்கவும் காப்பீட்டு நிறுவனங்கள் விரிவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்களில் காப்பீட்டு நிறுவனங்களும் இணைந்து செயலாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசு எடுத்த நடவடிக்கைகள்: டீலர்கள் மற்றும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் பலர் எவ்வித கட்டணமுமின்றி பழுதடைந்த வாகனங்களை சர்வீஸ் செண்டர்களுக்கு மீட்பு வாகனங்கள் மூலம் கொண்டு வருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் மீட்பு வாகனங்களின் இருப்பு குறைவாக உள்ளதால் போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 2,080 மீட்பு வாகனங்களின் விவரங்களும் அந்த வாகன உரிமையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களும் அவற்றைத் தருவிப்பதற்கு எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலரைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அவர்களது அலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2,080 மீட்பு வாகனங்களில் 187 Fork Lift வாகனங்களும், 1,788 ரெக்கவரி வாகனங்களும், 61 Towing Truck-களும்; 31 Tower Wagons-களும், 13 டிராக்டர் டிராலிகளும் அடங்கும்.

நிதித்துறையும், தொழில்துறையும், உள்(போக்குவரத்து) துறையும் இணைந்து, விரைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக 3,433 வாகனங்கள் இதுவரை (டிச.9) வரை பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1,683 வாகனங்கள் நான்குசக்கர வாகனங்களாகும், மீதமுள்ள 322 வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்களாகும், 1,428 வாகனங்கள் இருசக்கர வாகனங்களாகும். இதுவரையில் 1,000-க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு செட்டில்மென்ட் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது விரைவுபடுத்தப்படும் என காப்பீட்டுநிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. இதுவரையில் 598 வாகனங்கள் மீட்பு வாகனங்கள் மூலம் பணிமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இவற்றில் 243 வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களாகும், 25 வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்களாகும், 324 வாகனங்கள் இருசக்கர வாகனங்களாகும.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கும், வெள்ள நீரை வெளியேற்றுவதற்கும், படகுகளைக் கொண்டு வருவதற்கும், தேங்கிய சகதி மற்றும் குப்பைகளை அள்ளுவதற்கும், கழிவுநீரை அகற்றுவதற்கும், பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கும், துய்மைக் காவலர்களை ஏற்றிச்செல்வதற்கும், கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குவதற்கும் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக 548 வாகனங்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி இன்று (டிச.10) கேட்டுக்கொண்டதின்பேரில் கூடுதல் எண்ணிக்கையில் பல்வகை வாகனங்களை வழங்குவதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

TVS மோட்டார் நிறுவனம், Hyundaiமோட்டார் நிறுவனம், Maruti மோட்டார் நிறுவனம், Honda மோட்டார் சைக்கிள் நிறுவனம்,Toyota மோட்டார் நிறுவனம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் குறிப்புகள் போக்குவரத்து ஆணையரகத்தில் இணையதளத்தில் (tnsta.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் கண்டுள்ள விபரங்களை பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வாகனத் தயாரிப்பு நிறுவனங்களோ அல்லது முகவர்களோ, காப்பீட்டு நிறுவனங்களோ பாதிக்கப்பட்டப் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு இடம் தேவைப்படும் பட்சத்தில் தகுதியான அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்களைத் தற்காலிகமாக இந்தப் பணிகளை முடிப்பதற்காக அரசு வழங்குவதற்குத் தயாராக உள்ளது. இதற்கென கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. இது முற்றிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வாகனங்களை பழுதுநீக்கம் செய்வதற்கும் காப்பீட்டு தொகைகளுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஓரிரு வாரங்களில் இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் ஒப்படைக்கப்பட்ட நிலத்தினை தொடர்புடைய அரசு துறைகள் மீண்டும் தனது பொறுப்பிலே எடுத்துக்கொள்ளும். இது முற்றிலும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு எடுத்த முடிவாகும்.

வாகன உரிமையாளர்களின் கவனத்துக்கு: மழை வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களில் என்ஜினை எக்காரணம் கொண்டும் இயக்கக் கூடாது அவற்றை நிறுவனங்களுக்கோ அல்லது டீலர்களுக்கோ இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா Helpline எண்களை தொடர்பு கொண்டால் அவர்கள் மீட்பு வாகனங்களில் வந்து வாகனத்தை எடுத்துச் சென்று பழுதுநீக்கம் செய்து தருவார்கள். இத்தகைய நிகழ்வுகளில் பெரிய அளவில் பழுது நீக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்படாது. மாறாக வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்கள் இயக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய பழுதுநீக்கத்துக்கும் அதிக செலவினத்துக்கும் வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை சரிசெய்வதற்கான நாட்களும் அதிகமாகும் என்பதை அறியவும்.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் பாதிப்பின் தன்மை மற்றும் வாகனப் பதிவு எண் தெளிவாக தெரியும்படி புகைப்படங்களை எடுத்து தங்களது காப்பீடு கோரும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அந்தந்த பகுதியிலேயே இருக்கும் அங்கிகரிக்கப்பட்ட மற்றும் அக்கீகரிக்கப்படாத மெக்கானிக்குகளிடம் சிறிய அளவில் பழுதுநீக்கம் செய்யப்பட்டிருந்தால் வாகனத்தின் பதிவு எண், வாகன உரிமையாளரின் பெயர், (பதிவுச்சான்றிதழில் உள்ளபடி) தெளிவாக குறிப்பிட்டு தேதி மற்றும் பழுதுநீக்கம் செய்யப்பட்ட விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

வாகனத்தின் தயாரிப்பு நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் ஆகியோர் நடத்தும் சிறப்பு மற்றும் நடமாடும் பழுது நீக்கும் மையங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்களும் Toll Free Number மற்றும் Helpline எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Toll Free எண்கள்: Royal Enfield-1800 2100 007, Yamaha- 1800 4201 600, TVS-1800 2587 555, Honda- 1800 1033 434, Suzuki-1800 1217 996, Maruti Suzuki-1800 1800 180, Lanson Toyota-1800 1020 909\ 1800 2090 909, Kia Motors-1800 1085 000, Hyundai-1800 1024 645, TATA Motors-1800 209 8282, Toytto-1800 102 50001 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!