June 2, 2023

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு; பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா அறிவிப்பு!.

நாடெங்கும் கொரோனா வரைரஸ் 2வது அலையின் தாக்கம் அதிகமாகி பரவிவரும் சூழ்நிலையிலும் 14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் ஏப்ரல் 9–ந் தேதி சென்னையில் தொடங்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் நடத்தப்பட்டு வருகின்றன. மே 30–ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது 29 போட்டிகள் முடிந்து நேற்று 30 போட்டியாக கொல்கத்தா – பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி நடக்க இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று உறுதியானது. இதனால் நேற்று இரவு ஆமதாபாத்தில் நடக்க இருந்த கொல்கத்தா- – பெங்களூரு அணிகள் இடையிலான ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான எல்.பாலாஜி, அந்த அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. வீரர்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.கொரோனா பாதிப்பை சந்தித்து இருக்கும் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட இருக்கிறது. மேலும் புதுடெல்லி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தின் கிரவுண்ட்மேன்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் கொரோனா பாதிப்பு இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க அடுத்த கட்ட போட்டிகளை மும்பையில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா மற்றும் டெல்லி அணியின் அமித்மிஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நிறுத்தம் செய்யப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். இ ஐபிஎல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கபட்டு புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் முடப்பட்ட நிலையில் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த மாணவர்களுக்கு தற்போது நடைபெற்று வந்த ஐ.பி.எல். போட்டிகள் சற்றே பொழுதுபோக்காக இருந்து வந்தது. தற்போது ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.