‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ – விமர்சனம்!

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ – விமர்சனம்!

ணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. இச்சூழலில் அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த தொடரில் சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லெஸ்பியன் உறவை மட்டுமே மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் தமிழ் படம் இதுவாம். இயற்கைக்கு முரணான உணர்வை, வழி வழி தொடரும் உறவை அறுப்பது போன்ற கருவை மையமாகக் கொண்ட கதைக்கரு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

அதாவது இப்படத்தை பிரபல நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார். தரங்கம்பாடி அருகே ஒரு ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷகிரா. இவரின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து மார்டன் கேர்ளான வினோதா என்ற பெண் வருகிறார். சினிமா எடுப்பதற்காக இந்த பகுதிக்கு வந்திருப்பதாகவும், சில நாட்கள் இங்கு தங்கியிருக்க இருப்பதாகவும் கூறுகிறார் வினோதா. தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறிவிடுகிறார் ஷகிராவின் தந்தை. ஷகிராவும் வினோதாவும் ஒரே அறையில் தங்குகின்றனர். அப்படி தங்கிய சூழலில் இருவருக்கும் லெஸ்பியன் என்பதையும் தாண்டிய காதல் (?) ஏற்பட்டு விடுகிறது. இந்த காதலை வினோதா ஷகிராவின் அப்பாவிடம் கூறுகிறார். இதனால், கோபம் கொண்ட இருவரையும் அடித்து கண்டிக்கிறார் ஷகிராவின் தந்தை. அத்துடன் , அவசரமாக ஷகிராவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் ஷகிராவும் வினோதாவும் இணைந்தார்களா.? இந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.

மியூசிக் டைரக்டர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் கேமராமேன் சதீஷ் கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, கடற்கரை மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஆனால் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் எப்போது வரும் என்று தெரியாது, அது இயற்கையானது என்பது போல், தன் பாலினத்தவர்கள் மீதே ஏற்படும் காதலும் இயற்கையானது தான், எனவே அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்ய ஆசைப்பட்டிருக்கும் டைரக்டர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக பதிவு செய்ய தவறியிருக்கிறார்.

மாறி வரும் வாழ்க்கை சூழலில் இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் கூறியதால், இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை என்றாலும், இதுபோன்ற உறவுகளை சமூகம் ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அப்படி ஒரு விஷயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக சொல்லாமல் அவசர அவசரமாக சொல்லியிருப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில், ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ ஓரினச்சேர்க்கையாளர்களின் மனதை மக்களுக்கு முழுமையாக புரியவைக்கவில்லை என்றாலும், பாராட்டக்கூடிய புதிய முயற்சி.

மார்க் 2/5

error: Content is protected !!