செய்தியைக் கேட்க / Listen to News
அமெரிக்காவின் சில மாகாணங்களில் மரிஜுவானா எனப்படும் போதை தரும் கஞ்சா பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்டு உள்ளது. அதிலும் தென் அமெரிக்கா நாடுகளில் முதன் முறையாக, கஞ்சா பயன்படுத்துவது உருகுவே நாட்டில் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டே இதற்கு உருகுவே அரசால் அனுமதி வழங்கப்பட்டுவிட்டாலும், வரும் ஜூலை மாதம் தான் கஞ்சா விற்பனை என்ற நடைமுறையும் வர உள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, உருகுவே நாட்டின் மருந்துக்கடைகளில் நபர் ஒன்றுக்கு மாதம்தோறும் அதிகபட்சமான 40 கிராம் வரை கஞ்சா வாங்கிக் கொள்ளலாம். இதற்கு அந்நாட்டின் தேசிய பதிவேட்டில் தங்கள் பெயர்களை உருகுவே குடிமகன்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு நபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட மாட்டாது.

இதனிடையே ஆளாளுக்கு வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருந்தாலும் வரைமுறையின்றி கஞ்சா தாவரங்களை வளர்த்துவிட முடியாது. அதிகபட்சம் ஒரு வீட்டில் இதுபோன்ற ஆறு தாவரங் களைத்தான் வளர்க்கலாம். இப்படி அரசு அனுமதித்ததும் 6,600 பேர் தங்கள் வீட்டில் கஞ்சா தாவரங்களை வளர்ப்பதற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்கிறார்கள்.
தற்போது தனி நபர்களும், கிளப்களும் இந்தத் தாவரங்களை வளர்த்தாலும் அவற்றை அரசின் மூலமாக மட்டுமே விற்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் லாபம் பகிர்ந்து கொள்ளப்படும். 5 கிராம் பாக்கெட்டாகதான் இதை விற்க வேண்டும் என்பதிலிருந்து, அதிகபட்சம் எவ்வளவு அடர்த்தியாக அந்த போதைப் பொருள் இருக்கலாம் என்பது வரை கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு. அத்துடன் விலையையும் அரசே நிர்ணயிக்கிறது
இதனிடையே இக் கஞ்சா வியாபாரத்தில் மருந்தகங்களுக்கு முன்னுரிமை கொடுக்க எண்ணுகிறது அரசு. அவற்றைக் கண்காணிப்பது எளிது என்பதால் சட்ட மீறலான விஷயங்கள் நடைபெறுவதைத் தடுத்து விடலாம் என்று எண்ணி இம்முடிவு எடுத்துள்ளது. ஆனால், உருகுவே நாட்டிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களில் ஜஸ்ட் 30 மெடிக்கல்ஸ் மட்டுமே இது போன்ற போதை மருந்துகளை விற்பதற்கு விண்ணப்பத்துள்ளன. காரணம், போதை மருந்து மாஃபியா கும்பல் தங்களுக்கு போட்டியாக வரும் எவரையும் அழித்து விடும் என்று பயம். (வெளிச்சந்தையில் பலமடங்கு அதிக விலையில் போதைப் பொருள்கள் விற்கப்படுகின்றன என்பது வெளிப்படை).
இதற்காக உருகுவே அரசு ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. பதிவு செய்துகொண்டு அரசின் சட்டதிட்டப்படி போதைப் பொருளை விற்கும் மருந்தகங்களில் ஸ்பெஷல் அலாரங்கள் பொருத்தப்படும். இவற்றை அழுத்தினால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுவிடும். அவர்கள் உடனடியாக வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் அந்த 30 மருந்தகங்களைத் தாண்டி ஒருவர் கூட முன்வரவில்லை என்பதுதான் சோகம்.

