கொரானா காலத்தில் தமிழ் சேனல்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும்!

கொரானா காலத்தில் தமிழ் சேனல்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும்!

தொலைக்காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும்.. வணக்கம். தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் ஒரு வரம் தொலைக்காட்சி. அத்தனை வீடுகளிலும் தொலைக்காட்சி ஓர் அத்தியாவசிய தேவையாகி நெடுங்காலமாகி விட்டது. அதன் மூலம் உலகத்தையேக் கொண்டு வந்து வீட்டுக்குள் கொட்டுகிறீர்கள். பெரும்பான்மையான மக்களுக்கு பொழுதுபோக்குக்கு மிக சிக்கனமான ஒரே வழி தொலைக்காட்சி மட்டுமே என்பதை ஸ்திரப்படுத்தினீர்கள்.

நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், பேட்டிகள், விவாதங்கள், ஆடல், பாடல் போட்டிகள், ஜோதிடம், பல்சுவை நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள், நகைச்சுவை பகுதிகள், உலகின் அத்தனை விளையாட்டுப் போட்டிகளும் நேரலையில் என்று உங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு தரமான நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் வழங்கி எங்களை ஒருவிதத்தில் காட்சி போதைக்கு நிரந்தர அடிமையாக்கினீர்கள்.

24 மணி நேரமும் இயங்கும் செய்தி சானல்கள் துவங்கி அடுத்த சேவையை துவங்கினீர்கள். போன நிமிடம் நிகழ்ந்த ஒரு நிகழ்வை இந்த நிமிடம் சொல்லி அசத்தினீர்கள். எந்த ஒரு சம்பவம் குறித்தும் “டிவிலயே சொல்லிட்டாங்க” என்று முழுமையாக நமபும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தினீர்கள். அச்சு ஊடகம் மிரண்டு போனது. பிறகுதான் உங்களுக்குள் துவங்கியது ஒரு ஓட்டப் பந்தயம். மாணவர்கள் அறிவுக்காகப் படிப்பதை விடுத்து மதிப்பெண்களுக்காகப் படிப்பதுபோல டி.ஆர்.பி ரேட்டிங் என்கிற மதிப்பெண்ணிற்காக உங்களில் சிலர் செயல்படத் துவங்கினீர்கள்.

இந்த டிஆர்.பி ரேட்டிங் மதிப்பெண்தான் உங்கள் தொலைக்காட்சிக்குக் கிடைக்கும் சர்வதேச, தேசிய நிறுவனங்களின் விளம்பரங்களையும் அதன் மூலம் வருமானத்தையும் தீர்மானிக்கும் தாரக மந்திரமானதால்..தொடர்களிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அந்த ஒரு அளவுகோல் மட்டும் வைத்துப் பார்த்தே அமைத்தீர்கள். சிலவற்றைத் தொடர்ந்தீர்கள். சிலவற்றை கழுத்தை நெறித்து நிறுத்தினீர்கள்.

அதே நடைமுறையை செய்தி சானல்களுக்கும் கொண்டுவந்தபோதுதான் உங்களில் சிலரின் நிஜ முகங்கள் தெரியத் துவங்கின. செய்திகளில் நடுநிலைமை என்பது கேள்விக் குறியானது. நம்பகத்தன்மை மீது நிழல் விழத் துவங்கியது.  இன்றைக்கு எல்லா சேனல்களுமே அதன் உரிமையாளர்கள் சார்ந்திருக்கும் ஜாதி, மதம், கட்சி சார்புநிலை கொண்டே செயல்படுவது மக்கள் அறிந்ததே.

இந்தக் குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும்.. பேரிடர் காலங்களில் நீங்கள் தருகிற செய்திகள், தகவல்கள், புள்ளி விபரங்கள் மிகவும் உபயோககரமாகவும், சேவையாகவுமே அமைந்து வந்திருக்கின்றன. சுனாமி, சென்னை வெள்ளம், கஜா புயல் போன்ற பேரிடர் தருணங்களில் உங்கள் செயல்பாடுகளைப் பாராட்டியேத் தீரவேண்டும். ஆனால்..உலகையே மிரட்டிவரும் மிகப் பெரிய பேரிடரான கொரானா காலத்தில் உங்களில் சிலரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும், வெறுப்பும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

என் ஃபேஸ்புக் பதிவுகளின் பின்னூட்டங்களிலும் சரி.. நான் தொலைபேசியில் உரையாடும் நண்பர்களும் சரி..தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்க்கக் கூடாதென்றும், பார்த்தாலும் பத்து நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு மூடிவிட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதை நீங்களும் அறிவீர்களா? வலிமையான ஊடகமான உங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நினைப்பது ஆரோக்கியமானதா? அப்படி ஒரு எண்ணம் எதனால் ஏற்பட்டது என்று ஆராய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. எதனால் மக்கள் மனதில் இப்படி ஒரு வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று யோசிக்கிறேன்.

1. பிரேக்கிங் நியூஸ் என்று எப்போதாவது போட்டதை இப்போது ஒவ்வொரு செய்திக்கும் போடுவது!

2. கொரனா செய்திகளில் தரப்படும் புள்ளி விபரங்களின் பின்னணியாகத் தரும் அச்சுறுத்தும் இசை!

3. 24 மணி நேரமும் கொரனா பற்றி மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் தந்து செய்திகள் வழங்குவது.

4. அரசு தருகிற புள்ளி விபரங்களில் பாதிக்கப்பட்டோர், இறந்தோர் பட்டியலுக்கு முன்னுரிமை தருவதும்.. குணமடைந்தோர் பட்டியலை முன்னிலைப் படுத்தாமல் தருவதும்..

5. குணமடைந்து திரும்பியவர் போக இப்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை மட்டும் தந்தாலே போதுமே. மொத்த எண்ணிக்கைக்கு என்ன அவசியம்? அது தேவைப்படுவோர் இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளட்டுமே.

6. இது ஏதோ பதக்கப் பட்டியல் போல இந்தியா இத்தனையாவது இடத்தில்.. தமிழ்நாடு இத்தனையாவது இடத்திற்கு முன்னேறியது என்று டென்ஷன் ஏற்படுத்துவது.

7. தொலைக்காட்சி விவாதங்களில் பெரும்பாலும் எதிர்மறைக் கருத்துக்களையே இடம்பெறச் செய்வது..

8. நம்பிக்கை ஏற்படுத்தும் தகவல்களை விடவும் நம்பிக்கையை காலி செய்யும் தகவல்களையே மிரட்டும் தலைப்புகளில் வழங்குவது!

இவையெல்லாம் என் ஒருவனின் தனிப்பட்டக் கருத்துக்கள் அல்ல. பலரின் கருத்துக்களின் தொகுப்பு.

உங்கள் செய்தியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்திகளை சேகரிப்பதால்.. அவர்கள் யாவருமே பாராட்டுக்குரியவர்களே..மிகுந்த பதட்டத்திலும், மன உளைச்சலிலும் , பொருளாதார நெருக்கடிகளிலும், எதிர்காலம் குறித்த கவலையான கேள்விகளுடனும் நாட்களை நகர்த்தும் மக்களுக்கு உங்கள் செய்திகளைப் பார்க்கும்போது பெரிதும் நம்பிக்கையையும், ஆறுதலையும் தரும்விதமாக வழங்க என்ன செய்ய வேண்டும் என்று அலசி ஆராய்ந்து செயல்படக் கோருகிறேன்.. என்பதைவிட கோருகிறோம் என்பதே சரி. .

பட்டுக்கோட்டை பிரபாகர்

Related Posts