சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில், அப்பட்டியலில் குறிப்பாக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞராக இருக்கும் விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு எதிராகவும், ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிப்பதற்கு எதிராகவும் சென்னை ஐகோர்ட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 21 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாபதிக்கும் சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் வழக்கறிஞர்கள், நாட்டின் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி பல்வேறு வெறுப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் பாஜ கட்சியில் இருக்கிறார். முன்னாள் பாஜ பொது செயலாளராகவும் இருந்துள்ளார். அவரது கருத்துகள் அனைத்தும் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமே உள்ளது. அரசியல் பின்புலத்தில் இருக்கும் விக்டோரியா கவுரி உள்பட யாரையும் ஒருபோதும் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்களின் குழு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், அரசியல் பின்புலம் கொண்ட வழக்கறிஞராக இருக்கும் விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. அதை ஏற்க முடியாது. அவரை நீதிபதியாகவும் நியமனம் செய்யக்கூடாது. இதுதொடர்பான மனுவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கை வரும் வெள்ளியன்று பட்டியலிட்டு விசாரிப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது

error: Content is protected !!