இந்தியா பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக வீழ்ச்சி -ஐநா கணிப்பு!

இந்தியா பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக வீழ்ச்சி  -ஐநா கணிப்பு!

உலகையே முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளின் பொருளா தாரம் கடும் வீழ்ச்சி அடையும். 2020 – 21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ஜிடிபி 4.8 சதவிதமாக சரியும் என ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. வெளிநாடுகளுடனான விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு வணிகம் மற்றும் வெளிநாடுகளுக்கான் ஏற்றுமதி இறக்குமதி அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்நிலையில் ஐ.நா இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கணக்கெடுப்பு 2020 என்ற தன் அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்கா, சீனா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகள் மற்றும் இந்தியா, இலங்கை வங்காளதேசம் போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடும் சரிவை சந்திக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என ஐநா கணித்துள்ளது.

அதேசமயம் அடுத்த நிதி ஆண்டான 2021-22ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக வளர வாய்ப்புள்ளதாகவும் ஐநாவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 10ம் தேதி வரையிலான தகவல்களை கொண்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் ஆரம்ப கால கணிப்புகள் மட்டுமே என ஐநா தெரிவித்துள்ளது.

error: Content is protected !!