கேரளா : பிரார்த்தனைக் கூட்டரங்கில் குண்டு வெடிப்பு; ஒருவர் பலி- வீடியோக்கள்

கேரளா : பிரார்த்தனைக் கூட்டரங்கில் குண்டு வெடிப்பு; ஒருவர் பலி- வீடியோக்கள்

கேரளாவிலுள்ள எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி – களமசேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எரிவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியான காட்சிகளில் அனைவரும் அலறி ஆங்காங்கே ஓடிக் கொண்டிருகிறார்கள்.

காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிர படுத்தினர். மேலும், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று களமசேரி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், என்ன மாதிரியான குண்டுகள் என்பது குறித்து 4 பேர் கொண்ட என்ஐஏ குழு உள்ளூர் போலீசாருடன் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

ஒருவர் உயிரிழந்து, இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை உறுதி செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது என தெரிவித்துள்ளார்.அதே சமயம் களமசேரி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்குநருக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். களமசேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!