தேசிய மருத்துவர்கள் தினமின்று!

தேசிய மருத்துவர்கள் தினமின்று!

ண்டுதோறும் ஜூலை 1 ஆம் தேதி, இந்தியா முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினமாக (National Doctors Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மருத்துவத் துறையின் மகத்தான பங்களிப்பையும், மனித உயிர்களைக் காப்பதில் மருத்துவர்கள் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவையையும் போற்றும் விதமாக அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக, நவீன மருத்துவத்தின் முன்னோடியும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராய் (Dr. Bidhan Chandra Roy) அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளான ஜூலை 1, 1991 ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

டாக்டர் பி.சி.ராய்: ஒரு பன்முக ஆளுமை

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பாங்கிபூர் என்ற ஊரில் 1882, ஜூலை 1 அன்று பிறந்த டாக்டர் பி.சி.ராய், மருத்துவராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தலைவராகவும், சமூக சேவகராகவும் திகழ்ந்தார். ஏழைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட அவர், தன் வாழ்நாள் முழுவதையும் மருத்துவப் பணிக்காகவே அர்ப்பணித்தார். மகாத்மா காந்திக்கு நெருக்கமான நண்பராகவும், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். அத்துடன், மேற்கு வங்க மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோதும், தன் மருத்துவப் பணியை நிறுத்தவில்லை. தன் வீட்டையே ஏழைகளுக்கான மருத்துவமனையாக மாற்றிக் கொடுத்த அவர், முதல் அமைச்சராக இருந்தபோதும் தினமும் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வந்தார். அவர் பிறந்த ஜூலை 1 ஆம் தேதியிலேயே (1962 ஆம் ஆண்டு) இயற்கை எய்தியது ஒரு தற்செயல் நிகழ்வாக இருந்தாலும், அவரது மருத்துவ அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேசிய மருத்துவர்கள் தினமாகப் போற்றப்படுகிறது.  இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976-ம் ஆண்டு முதல்  டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமும் சேவை மனப்பான்மையும்:

மருத்துவர்களுக்குப் பரந்த அன்பும், அளவற்ற சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம். உயிர்வலி தாங்காமல் துடித்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரைக் காணும்போதெல்லாம், அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நம்பிக்கை மருத்துவரின் மனதில் ஒளிரும். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. “இந்த உலகில் தெய்வமே இல்லை” என்று வாதிடுபவர்கள்கூட, மருத்துவர்களின் அளப்பரிய சேவையைக் கண்டு, அவர் வடிவில் தெய்வத்தைக் கண்டதாகக் கூறுவதுண்டு.

தெய்வங்கள் நேரடியாக பூமிக்கு வருவதில்லை. அன்பு, சேவை, கருணை ஆகியவை எந்த உள்ளத்தில் இருக்கிறதோ, அந்த மனிதனிடம் இறைவன் வந்து குடிகொள்கிறான். அதனால்தான், இந்த குணங்களைக் கொண்ட மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்களாகப் போற்றப்படுகிறார்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மருத்துவர்கள். அவர்களே, ஒரு புதிய மறுபிறவியைக் கொடுக்கும் கடவுள்கள். மனித வாழ்வில் முக்கியமான அம்சங்களான மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதுபோல மருத்துவர்களும் பெரும் பங்களிப்பை மேற்கொண்டு வருவது உலகறிந்த உண்மை.

மருத்துவர்கள் தங்கள் நலனிலும் அக்கறை காட்ட  வேண்டும்: 

மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக்  கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு. இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாக இருக்கிறது.  இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69  முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும். அதிக மன அழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த சொகுசு வாழ்க்கை, உடற்பயிற்சி  இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,ஒழுங்கற்ற சாப்பாட்டு  வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறது. தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும்  அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்!

இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில், தங்கள் வாழ்வை மனித குல சேவைக்காக அர்ப்பணித்துள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் நம் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். அவர்களின் தன்னலமற்ற பணிக்கும், இரக்க குணத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!