சர்வதேச நகைச்சுவை தினம்
நாகரீகம் பெற்ற மனிதர்களாக வாழ்த்தொடங்கிய காலத்திலிருந்தே நகைச்சுவைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாலும் பண்டைய கிரேக்கர்கள் தான் முதன்முதலில் நகைச்சுவைகளைச் சொன்னார்கள் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் அதனை சுமேரியர்களிடம் கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிய நகைச்சுவைகளை புகழ்பெற்ற கவிஞர்களும் தங்கள் படைப்புக்களில் பயன்படுத்தியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நகைச்சுவைகள் அதன் தற்போதைய பொழுதுபோக்கு வடிவத்தைப் பெறவில்லை அதனைத்தொடர்ந்த காலங்களில் தான் நகைச்சுவை துணுக்குகள், கதைகள் அடங்கிய புத்தகங்கள் வெளிவரத் துவங்கி அது பொழுதுபோக்கு வடிவமாக மாறத்துவங்கியது. சமூக பிரச்சனைகள், அரசியல் மற்றும் சமூக தலைவர்களின் குறைகளையும் அலட்சியப் போக்கையும் இலைமறை காயாக மக்களுக்கு வெளிப்படுத்தவும் காலப்போக்கில் நகைச்சுவைகள் உருவாகின. 1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க எழுத்தாளரான wayne reinagel என்பவரால் இந்த பன்னாட்டு நகைச்சுவை நாள் கொண்டாடத் தொடங்கப்பட்டது. இவரது நகைச்சுவை புத்தங்களின் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட இந்நாள் காலப்போக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி சர்வதேச நகைச்சுவை தினமாக (International Joke Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிரிப்பு என்பது வெறும் உதட்டசைவு அல்ல; அது மனித வாழ்வின் ஒரு முக்கிய அங்கம். மன அழுத்தத்தைக் குறைத்து, உடல்நலத்தை மேம்படுத்தி, உறவுகளை வலுப்படுத்தி, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி நகைச்சுவை. அந்த நகைச்சுவை உணர்வை வளர்த்து நமது மனநலனையும், உடல் நலனையும் காத்துக்கொள்வோம்.

நகைச்சுவையின் முக்கியத்துவம்
இயந்திரமயமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில் சிரிப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் பலர் ஓடி ஓடி உழைக்கின்றனர். விளைவு இலவச இணைப்புக்களாக ஏராளமான நோய்கள் வந்து தாக்குகின்றன. தான் வாழும் சூழலில் உடன் வாழும் மனிதர்களிடத்தில் நமது அன்றாட நிகழ்வுகளை வர்ணித்து மகிழ்வடைவதை மறந்து சிரிப்பை சிகிச்சையாக பெற மையங்களைத் தேடி அலையும் சூழல் உருவாகி விட்டது. உடற்பயிற்சிக் கூடங்கள் போல சிரிப்பு சிகிச்சை எனப்படும் நகைச்சுவை தெரபி மையங்கள் பல உருவாகி எப்படி சிரிக்க வேண்டும் எப்போது சிரிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் காலகட்டத்திற்கு நாம் வந்து விட்டோம்.
நகைச்சுவை உணர்வு பற்றி மருத்துவ ஆய்வுகள் பல நிகழ்த்தி அதன் முடிவுகளை பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய இருண்ட சூழலில் இருந்து நம் மனதை திசைதிருப்ப சிரிப்பு உதவுகின்றது. நாம் நலமாக இருப்பதற்கான ஒரு வழியாகவும் அது திகழ்கின்றது என்று கூறியுள்ளார் மேரிலந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சார்ந்த இதய மருத்துவர் மைக்கல் மில்லர் (Michael Miller). மேலும் அதிக மனஅழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் நிலை அதிகரிப்பதால் மனஅழுத்தம் ஏற்படும்போது நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது பதற்றத்தையும் குறைக்க உதவும் என்ற அவர், நகைச்சுவை உணர்வுடன் இருப்பவர்களுக்கு ஆயுள் காலம் கூடுவதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“சிரிப்பவர்களைக் கண்டால் தனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார் மகாத்மா காந்தி. மூதறிஞர் ராஜாஜி புன்னகை தவழும் முகத்துடன் வேலை செய்பவர்கள் திறமையுடனும் சரியாகவும் ஆவலுடனும் தங்களது வேலையைச் செய்கிறார்கள்’ என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் சிரிப்பு மனிதர்களுக்கே உரியது. அதன் அருமையை உணராமல் இருக்க வேண்டாம்’ என்றார். மனிதர்கள் பொதுவாக தனிமையில் இருக்கும்போது சிரிப்பதை விட, குழுவாக நாலுபேருடன் இணைந்திருக்கும் போதுதான் அதிகம் சிரிக்கக்கூடியவர்கள் என்று ராபர்ட் புரோவின் கண்டறிந்தார். இவர் சிரிப்பதற்கு நகைச்சுவை உணர்வு 15 விழுக்காடும் உறவுகள் 85 விழுக்காடும் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். நகைச்சுவைக் காணொளிகளைப் பார்ப்பதால் ஞாபக சக்தி, கற்கும் ஆற்றல் அதிகரிப்பதாக லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக் கழக ஆய்வு கண்டுபிடித்துள்ளது. நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பது மீள்திறனுக்கும் மிக முக்கியம் என்றார் கொலம்பியா (Columbia) பல்கலைக் கழகத்தின் மனோவியல் பேராசிரியர் ஜார்ஜ் பொனான்னோ (George Bonanno) சந்தோஷமான சூழலில் சந்தோஷமான மனதோடு செய்யும் எந்த வேலையும் ஒவ்வொருவருக்கும் உடல்நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தித் தரவே செய்யும். அதனால்தானோ என்னவோ வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்றார்கள் நம் முன்னோர்கள்.
உடல்மொழியின் மிக முக்கிய அங்கமான சிரிப்பாராய்ச்சியை உலகம் கவனிக்கத் தொடங்கியதும் அதை மருத்துவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள். சிரிப்பாராய்ச்சியின் முடிவுகளை வைத்து அமெரிக்க மருத்துவர்கள் ‘சிரிப்பு அறை’ ஒன்றை அமைத்தார்கள். அதில் நகைச்சுவையான புத்தகங்கள், படங்கள், ஒலி நாடாக்களை நிரப்பி, அந்த அறைக்குள் நுழைபவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாதவாறு அமைத்தார்கள். ஒவ்வொரு நோயாளியும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை அந்த அறையில் இருக்க வைக்கப்பட்டார்கள். இதற்கு நல்ல பயன் கிடைத்தது. நோயாளிகளின் உடல் நலம் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. மருத்துவமனையில் இருக்கும் நாள்கள் குறைந்தன. மிக முக்கியமாக நோயாளிகளைக் கையாள்வது மருத்துவர்களுக்கு மிக எளிமையானதாக இருந்தது.

வயிறு குலுங்கச் சிரிப்பவர்கள் பிராணவாயுவை அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் உண்டாகும் அதிர்வு இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உள் உறுப்புகளை நன்கு இயங்கத் தூண்டுகிறது. உணவு நன்கு செரித்து மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. இதேநிலை தொடரும் போது நமது உடலில் தேங்கும் கரியமில வாயு உடனுக்குடன் நீக்கப்பட்டு உடல் புத்துணர்வு பெறும். நமக்கு வரக்கூடிய நோயின் தன்மை குறையலாம். நாளடைவில் நோய் தீரவும் வழி பிறக்கும். அமெரிக்க நாட்டு பிரபல பத்திரிகைகளில் ஒன்று சண்டே ரெவ்யூ’. இதில் பத்திரிகையாளராகப் பணி புரிந்தவர் நோர்மன் கொவ்சின். இவருக்கு முதுகுத்தண்டு வலி நோய் வந்தது. விரைவில் அந்நோய் குணமாகவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தார். ஓர் பழைய திரைப்படக் கருவியை விலைக்கு வாங்கினார். சிரிப்பை வரவழைக்கக் கூடிய நல்ல நகைச்சுவைப் படங்களை ஓடவிட்டு வாய் விட்டுச் சிரித்தார். கூடவே மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்தார். சிரிப்புப் படத்தை ஒருமுறை பார்த்த பிறகு இவரால் இரண்டு மணிநேரம் வலி இல்லாமல் இருக்க முடிந்தது. சிரிப்பினால் நாளடைவில் இவருக்கு வலி தந்த வியாதி இவரை விட்டு முற்றிலுமாக விலகி ஓடியது. நாம் ஒருநாளைக்கு எத்தனை முறை சிரிக்க வேண்டும் என கணக்கு எதுவும் கிடையாது. ஆனால் ஒரு நாளைக்கு 17 முறை குறைந்தபட்சம் கட்டாயமாகச் சிரிக்க வேண்டும் என மருத்துவ உலகம் கூறுகிறது. அதிகமாகச் சிரிப்பதால் சாதாரணமாக நாம் உட்கொள்ளும் பிராணவாயுவின் அளவு அதிகரிக்கும். இதனால் நம் உடலில் ஏற்பட்டுள்ள காயம் விரைவில் ஆறி விடவும் வாய்ப்பு உண்டாகிறது.
பல்வேறு வடிவங்களில் நகைச்சுவை
நகைச்சுவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது:
- வாய்மொழி நகைச்சுவை: புதிர்கள், விளையாட்டுகள், கதைகள், மற்றும் புத்திசாலித்தனமான உரையாடல்கள் இதில் அடங்கும்.
- உடல்மொழி நகைச்சுவை: கோமாளித்தனம், மிமிக்ரி, மற்றும் உடல் அசைவுகள் மூலம் சிரிக்க வைப்பது.
- சூழ்நிலை நகைச்சுவை: எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது முரண்பாடுகள் மூலம் உருவாகும் நகைச்சுவை.
- நகைச்சுவை நாடகங்கள்/திரைப்படங்கள்: பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கலை வடிவங்கள்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நகைச்சுவைக்கு தனி இடமுண்டு. ஒரு கலாச்சாரத்தில் வேடிக்கையானதாகக் கருதப்படுவது, மற்றொரு கலாச்சாரத்தில் அப்படி இருக்காது. ஆனால், சிரிக்க வேண்டும் என்ற அடிப்படை ஆசை உலகளாவியது.
சர்வதேச நகைச்சுவை தினத்தின் நோக்கம்
சர்வதேச நகைச்சுவை தினத்தின் முக்கிய நோக்கம், மக்களின் வாழ்வில் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும். இந்த நாளில், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகாக்களுடன் சேர்ந்து வேடிக்கையான விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது, நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, அல்லது ஒருவருக்கொருவர் சிரிக்க வைக்கும் வகையில் ஏதாவது செய்வது போன்றவற்றை மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். மேலும், இந்த தினம் நம்மைச் சுற்றியுள்ள உலகில் நேர்மறை மற்றும் மகிழ்ச்சியைப் பரப்ப ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.
இறுதியாக, சிரிப்பு ஒரு இலவச மருந்து, இது பக்கவிளைவுகள் இல்லாதது. எனவே, இந்த சர்வதேச நகைச்சுவை தினத்தில், மனதாரச் சிரிப்போம், மற்றவர்களையும் சிரிக்க வைப்போம். சிரிப்பின் மூலம் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உலகை உருவாக்குவோம்.
டாக்டர்.ரமாபிரபா


