வரும் 8–ந் தேதி தமிழக பட்ஜெட் : ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!

வரும் 8–ந் தேதி தமிழக பட்ஜெட் : ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!

தமிழக சட்டசபை வரும் 8–ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் 2019–2020–ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள், சலுகைகள், திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார். அதன்பின், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் இயற்றப்பட்டது. பின்னர், ஆளுநர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சரின் பதிலுரைக்குப் பின் 8–ந் தேதி அன்று தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.இந்த நிலையில் வரும் 8–ந் தேதி மீண்டும் சட்டசபை கூடுகிறது. அன்றைய தினம் 2019–20–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இது குரித்து தமிழக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை 8.2.2019–ம் நாள், வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.

மேலும், அன்று காலை 10 மணிக்கு 2019–2020–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்” என்று சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் கூறியுள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் போலவே தமிழக பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள், சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறும். 3 அல்லது 4 நாட்கள் பொது விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசுவார்.

இதன் பின்னர் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் கேட்கப்பட்ட நிதி ஒதுக்கப்படும்.

error: Content is protected !!