மக்களவையில் தாக்கலான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்?

மக்களவையில் தாக்கலான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்?

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால் வரிச் சலுகை, புதிய திட்டங்கள் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளது மோடி அரசு .

நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் காலை 11 மணிக்கு எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய போது, “நாடு இப்போது முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. புதிய இந்தியா 2020 என்ற இலக்கை நோக்கி நாடு வெற்றிகர மாக முன்னேறி வருகிறது. சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றில் நாடு கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் உருவாகியுள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. வங்கித்துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனைத் தரத் தொடங்கியுள்ளன.பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலை மாறி இப்போது மிகவும் குறைந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் இருந்த 6% நிதிப் பற்றாக்குறை இப்போது 3% ஆக குறைந்துள்ளது. வங்கித்துறை சீர்திருத்தங்களால் வாராக்கடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் வசூலிக்கப் பட்டுள்ளது. எவ்வளவு பெரிய தொழிலதிபர்கள் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்று தெரிவித்தார்.

மேலும் பட்ஜெட் சாராம்சம் இதோ:

* 2018-19 ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* 2018 டிசம்பரில் பணவீக்கம் 2.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு

* நாட்டின் 98 சதவீதம் கிராமப்பகுதிகள் தூய்மை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

* 5.45 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாதவையாக ஆக்கப்பட்டுள்ளன.

* பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் 2014-18 ஆண்டுகளில் 1.53 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

* ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,70,000 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

* ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 50 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.

* மீன் வளர்ப்பிற்கு தனித்துறை உருவாக்கப்படும்.

* பசுக்களை பாதுகாக்க ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்

* பிரதமர் வேளாண் திட்டத்திற்கு ரூ.20,000 கோடி

* கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

* அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பணி ஓய்விற்கு பிறகு பென்சன் கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்விற்கு பிறகு மாதத்திற்கு ரூ.3000 பென்சன் வழங்கப்படும்.

* பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு. தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

* முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

* ஆளில்லா ரயில் கிராசிங் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கீடு

* வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 21 சதவீதமாக அதிகரிப்பு

* கடந்த ஆண்டு நேரடி வரி வசூல் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* சினிமா படப்பிடிப்புகளுக்கு ஒற்றைசாளர முறையில் ஒப்புதல்

* 2030 க்குள் எலக்ட்ரிக் வாகனங்கள் மயமாக்க அரசு இலக்கு

* அனைத்து வருமான வரித்தாக்கல் முறைகளும் 24 மணிநேரத்தில் நிறைவு செய்யப்படும்.

* 99.54 சதவீதம் வரித்தாக்கல் எவ்வித கெடுபிடிகளும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படும்.

* அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்.

* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் வழங்க நடவடிக்கை

* 2வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும்

* வீட்டு வாடகையிலிருந்து பெறும் வருமானத்திற்கு வரிச்சலுகை 1.8 லட்சத்தில் இருந்து 2.4 லட்சமாக உயர்வு.

* டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான தொகைக்கு இனி வரிபிடித்தம் இல்லை.

* வங்கி டெபாசிட்கள் மூலம் ரூ.40,000 க்கு மேற்பட்ட அனைத்து வருமானத்திற்கும் வரி உண்டு. ரூ.10,000 வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.

* தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு. ரூ.6.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதற்கு வரி இல்லை. இதன் மூலம் 3 கோடி வரிசெலுத்துவோர் பயனடைவார்கள்.

* நிரந்தர வருமான வரிக்கழிவு ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்வு

என்று பல சலுகைகள் அறிவித்து 2019 இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கலை முடித்து வைத்தார்.

error: Content is protected !!