தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நாளை வெளியாகும்?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 4 மாதங்களுக்கு மேல் முழு அடைப்பு, பெரும்பான்மையான குடும்பங்களில் பொருளாதார நெருக்கடி இருந்தாலும் வர இருக்கும் சட்டமன்ற பணிகள் மட்டும் எந்தவித தடையுமின்றி ஜரூராக நடந்து வருகிறது. அந்த வகையில் நம் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்த இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது.
நம் நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ள நிலையில் கூட எல்லா தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் தாக்கல் செய்யப்பட்ட 7,238 மனுக்களில் 1,855 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 2000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3,003 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நாளை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். எனவே நாளை மாலை மூன்று மணிக்கு மேல், இறுதி பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, யார் யார் இறுதியாக போட்டியிட உள்ளனர் என்ற வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தெரிந்துவிடும். இதன் பின்னர் முழு வீச்சில் பரப்புரை நடக்கும் என்று தெரிகிறது.