தமிழகத்தில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!.
நம் நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசால் 2018 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் உருவாக்கப்பட்டது. அதாவது நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு விளையாட்டு மிகவும் முக்கியமான அங்கமாகும். கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த மகத்தான ஆற்றல் உலகளாவிய மேடையில் காட்டப்பட வேண்டும். இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நேரம் இது, அவர்களுக்கு உயர்தர உள்கட்டமைப்பு மற்றும் உயர் மட்டப் பயிற்சி அளிக்கிறோம். வீரர்கள் தங்கள் உண்மையான திறனை வெளிப்படுத்த உதவும் விளையாட்டுகளில் வலுவான பங்கேற்பு உணர்வை நாம் வளர்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு விளையாட்டு வல்லரசாகும் கனவை நனவாக்க முடியும். நமது நாட்டில் விளையாடும் அனைத்து விளையாட்டுகளுக்கும் வலுவான கட்டமைப்பை உருவாக்கி, இந்தியாவை ஒரு சிறந்த விளையாட்டு நாடாக நிலைநிறுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள விளையாட்டு கலாச்சாரத்தை அடிமட்ட அளவில் புதுப்பிக்க, Khelo India திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இந்தியா அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் பிரதமர்மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு அடுத்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2023-ஆம் ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. அனைத்து இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்த இது ஒரு தளமாக விளங்கும். 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டின் போது அனைவரும் கண்டது போல, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தமிழகம் மிக விமரிசையாக நடத்தி, தமிழ்ப் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் பறைசாற்றும்” என்று அதில் கூறியுள்ளார்.


