கொரொனா பரவுவதில் 3ம் நிலையை தொடாமலிருக்க பாடுபடுகிறோம் – சீஃப் செக்ரட்டரி பேட்டி – வீடியோ!

கொரொனா பரவுவதில் 3ம் நிலையை தொடாமலிருக்க பாடுபடுகிறோம் – சீஃப் செக்ரட்டரி பேட்டி – வீடியோ!

தமிழகத்தில் இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பால் தூத்துக்குடியைச்சேர்ந்த 73 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்த தொற்று 3-வது நிலைக்குச் செல்லாமல் இருக்க அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் க. சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியது இதுதான்:

‘இன்று வரை கரோனா நோய் பாதிப்பு, சிகிச்சை குறித்த தமிழகத்தின் நிலை என்னவென்றால் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 47 ஆயிரத்து 056 பேர். அரசாங்க கண்காணிப்பில் உள்ளவர்கள் 168 பேர். * 28 நாள் தனிமைப்படுத்துதலை முடித்தவர்கள் 45,758 பேர். இதுவரை எடுக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 8,410. அதில் நேற்று வரை நோய்த்தொற்று உறுதியானது 833 பேர். இன்று நோய்த்தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 77.

* இன்றைய மொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை 911 ஆக உயர்வு.

* இதுவரை 34 மாவட்டங்களில் கண்காணிக்கும் பணியில் ஆய்வு செய்யப்பட்ட வீடுகள் 16 லட்சத்து 61 ஆயிரத்து 487. கண்காணிப்புப் பணியில் சந்தித்த மக்கள் 58 லட்சத்து 77, 348 பேர். களத்தில் இருந்த பணியாளர்கள் 32 ஆயிரத்து 807 பேர்.

* இதுவரையில் சிகிச்சை முடிந்து உடல நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 44 பேர்.

கடுமையான முயற்சியை அரசு எடுத்து வருகிறது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமென நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காகத்தான் பாடுபடுகிறோம். இன்று நோய்த்தொற்று 77 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 72 பேர் ஏற்கெனவே தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்.

தூத்துக்குடியில் 71 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் நாம் இரண்டாவது கட்டத்தில்தான் உள்ளோம். மூன்றாவது கட்டத்துக்குப் போகவில்லை. அதற்குப் போகக்கூடாது என்பதற்காகத்தான் நாம் போராடி வருகிறோம்.

SARI எனப்படும் தீவிர சுவாசத்தொற்று பாதிப்பு (severe acute respiratory infection) இருந்து அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து கண்டறிந்து 100 சதவீதம் டெஸ்ட் எடுக்கிறோம். அதில் கடந்த 24 மணிநேரத்தில் 71 பேருக்கு ஆய்வு நடத்தியதில் பாசிட்டிவ் யாருக்கும் இல்லை.

தீவிரமாக அரசு எடுக்கும் முயற்சி என்னவென்றால் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆய்வு நடத்துகிறோம். அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி ஆய்வு செய்ய உள்ளோம். முதல்வர், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதையும் செய்ய உள்ளோம்.

ஏழை எளிய மக்கள் , ரேஷனையே நம்பியுள்ள குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான 5 கிலோ அரிசி பருப்பு கொடுக்கிறோம். நிவாரண உதவி பணம் 90 சதவீதத்துக்கு மேல் கொடுத்தாகி விட்டது. அரிசி பருப்பும் 50 சதவீதத்துக்கும் மேல் கொடுத்து விட்டோம். அதேபோல் வறுமையில் வாடும் நடைபாதை வியாபாரிகள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலவேறு தொழிலாளர்களுக்கு ரூ.85 கோடி ஒதுக்கப்பட்டு 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க சமூக விலகலைக் கடைப்பிடிக்க மக்கள் வெளியில் வராமல் இருக்க காய்கறிகளை வீடுகளில் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு கோயம்பேட்டிலிருந்து 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று விநியோகம் செய்து வருகின்றன. அதன் விலையும் கோயம்பேடு மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் அளவே உள்ளது.

அதேபோன்று மளிகைப் பொருட்களையும் வீடு தேடிச் சென்று விற்பனை செய்யும் நடைமுறையும் வர உள்ளது. வயது முதிர்ந்தவர்கள், நோயுற்றவர்களுக்கு வீடுகளிலேயே உணவு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தவர்கள் மூலம் உணவு வழங்கவும் அவ்வாறு இயலாதவர்கள் இருக்கும் சூழ்நிலையில் காப்பகங்களில் அவர்களைப் பராமரித்தும் உணவு பிற தேவைகள் கிடைக்கச் செய்துள்ளோம்.

பலவித முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களைக் கட்டுப்படுத்தினால், அவர்களை வெளியில் வராமல் செய்தால் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் எனத் தெரிகிறது.

நேற்று 12 கண்காணிப்புக் குழுக்களின் கருத்துகளை முதல்வர் கேட்டார். இன்று 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினரின் கருத்தையும் கேட்டார். அவர்கள் கருத்து என்னவென்றால் நோய் கட்டுக்குள் வராத பட்சத்தில் ஊரடங்கை நீக்கினால் எடுத்த முயற்சிகள் வீணாகும் என்று தெரிவித்துள்ளனர். முதல்வர் அதைப் பரிசீலித்து வருகிறார். நாளை பிரதமருடனான ஆய்வுக்குப் பின் முதல்வர் ஊரடங்கு குறித்து அறிவிப்பார்.

ரேபிட் டெஸ்ட் கருவி வந்திருக்க வேண்டும். சற்று தாமதமாகிறது. விரைவில் கருவி வந்துவிடும். இன்று நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 77 பேரில் நேரடியாகப் பயணம் செய்தவர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என இரண்டு வகை உள்ளனர். நேற்றைய கணக்கின்படி 23 பேருக்கு தொடர்பை நிர்ணயிக்க முடியவில்லை. ஆனால் ஒரு அனுமானம் வர முடியும். ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கூறியுள்ளோம். ஒரு சில இடங்களில் கண்டறிந்தவுடன் உடனடியாக மாவட்ட ஆட்சியரை அழைத்து விளக்கம் கேட்டுச் சரி செய்கிறோம்.

தமிழகத்தில் மருத்துவ உபகரணங்களைத் தயார் செய்யும் வேலைகளை நாமே தயார் செய்து வருகிறோம். வென்டிலேட்டர், டெஸ்ட்டிங் கிட் உள்ளிட்டவற்றை நாமே நேரடியாக வாங்குகிறோம்.

மத்திய அரசு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளார். இது தவிர தற்போது ரூ.314 கோடி அனுப்பியுள்ளனர். மத்திய அரசு நிதி அனுப்புகிறார்கள். அதை மட்டும் பயன்படுத்தாமல் மாநிலத்தில் உள்ள நிதியைப் பயன்படுத்துகிறோம். வேலை நடக்கிறது எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

மூன்றாவது நிலையை நாம் அடையவில்லை. அதைத் தடுக்கத்தான் போராடுகிறோம். நான் ஏற்கெனவே கூறியபடி, SARI (severe acute respiratory infection) தீவிர சுவாசத்தொற்று பிரச்சினையால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளையும் கணக்கெடுத்து (SARI-test) சோதிக்கிறோம். SARI (sevire accute respiratory infection) தீவிர சுவாசத்தொற்று பிரச்சினை கிட்டத்தட்ட கோவிட்-19 நோய்க்கு இணையானது.

ஆகவேதான் அந்த நோய்த்தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களை (SARI-test) சோதிக்கிறோம். அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என்ற நிலை வந்தால் அதுதான் மூன்றாவது நிலை நோக்கிச் செல்லும் நிலை. அப்படி நாம் சோதனை செய்ததில் இன்று 77 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை நடத்தினோம். ஆனால் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை’.

இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

error: Content is protected !!