முதலமைச்சராகக் கலந்து கொள்ளும் முதல் மாநாடு இந்த உள்ளாட்சி மாநாடுதான்!- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முதலமைச்சராகக் கலந்து கொள்ளும் முதல் மாநாடு இந்த உள்ளாட்சி மாநாடுதான்!- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஞாயிறுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நாமக்கல், தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டையில் ‘நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மாவட்ட செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், தி.மு.க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும் மாநாட்டைத் துவங்கி வைத்து பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னை கோட்டைக்குள் நீங்கள் வந்து பார்த்தால் பத்து மாடிக் கட்டடம் கம்பீரமாக இருக்கும். அந்தக் கட்டடத்தை 1974 ஆம் ஆண்டு கட்டியது முதல்வர் கலைஞர் தான். அதற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று 1989 ஆம் ஆண்டு பெயர் சூட்டியவரும் முதல்வர் கலைஞர் தான். தமிழ்நாட்டையே இயக்கும் தலைமைச் செயலக அலுவலகம் இருக்கும் கட்டடமே நாமக்கலார் பெயரில் தான் இருக்கிறது.அத்தகைய பெருமை மிகு நகரில் இந்த மாநாடு நடந்து கொண்டு இருக்கிறது.

நான் எனது வாழ்நாளில் எத்தனையோ மாநாடுகளில் பங்கெடுத்துப் பேசி இருந்தாலும், நான் முதலமைச்சராகக் கலந்து கொள்ளும் முதல் மாநாடு இந்த உள்ளாட்சி மாநாடுதான். மிகமிகச் சிறுவயதில் ஆழமான அரசியல் கருத்துக்களை உள்வாங்கி தலைவர் கலைஞர் வழியில் இயக்கத்துக்காக என்னை நானே ஒப்படைத்துக் கொண்டேன்.பள்ளிப் பருவமாக இருந்தாலும், கல்லூரிக் காலமாக இருந்தாலும்,படிப்பை விட இயக்கமே நமது வாழ்க்கை என்று நினைத்து நான் செயல்பட்டு வந்தேன்.

ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் படி படி படி என்று என்னை அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்கள். பள்ளிப் படிப்பை விட அரசியல் படிப்புதான் எனக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. அரசியல் ஆர்வம் என்பது பதவிக்கு வரவேண்டும், மாலை மரியாதைகள் வர வேண்டும் என்பதற்காக அல்ல.மக்கள் பணியாற்ற வேண்டும், இந்த நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்த முடிவுக்கு வந்தேன்.

தந்தை பெரியாரை பார்க்கிறேன், பேரறிஞர் அண்ணாவை பார்க்கிறேன், பெருந்தலைவர் காமராசரைப் பார்க்கிறேன், தமிழினத் தலைவர் கலைஞரைப் பார்க்கிறேன். இவர்களைப் போல மக்கள் பணியாற்ற வேண்டும், ஒரு கொள்கைக்காக, லட்சியத்துக்காக உழைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அப்படி நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, பாராட்டுகள் அல்ல, மலர் மாலைகள் அல்ல,சிறைச்சாலைகள் தான் எனக்குக் கிடைத்தது. சித்ரவதைகளைத் தான் அனுபவித்தேன்.துன்ப துயரங்களே என்னை வரவேற்றது.

திருமணமான ஐந்தே மாத காலத்தில் மனைவியைப் பிரிந்து ஓராண்டு காலம் சிறைவைக்கப்பட்டேன்.கட்சியே வேண்டாம்,அரசியலே வேண்டாம்,கழகமே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போனவர்கள் உண்டு.தி.மு.கவை விட்டு விலகுகிறேன் என்று எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வதாகக் கூட அப்போது சிறையில் சொல்லப்பட்டது. அப்படி எழுதிக் கொடுக்க மறுத்தவன் மட்டுமல்ல, மற்றவர்களிடமும் அப்படி எழுதிக் கொடுக்கக் கூடாது என்று சொன்னவன்தான் நான்.

முதன்முதலாக சட்டமன்றத்துக்குள் நுழைந்த ஆண்டு 1989. மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்குள் நான் அடியெடுத்து வைக்க 12 ஆண்டுகள் பிடித்தது. இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பொறுப்புகள் உடனடியாகக் கிடைத்துவிடாது. அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புகளுக்காக காத்திருக்க வேண்டும். கோடிக்கணக்கானவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மாபெரும் பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இங்கு பொறுப்புகள் என்பது சில ஆயிரம் பேருக்குத் தான் கிடைக்கும். வாழ்க்கையில் எந்தப் பொறுப்புக்குமே வராமல் கழகத்துக்காக உழைப்பை மட்டுமே தந்து அதிகாரம் பெறாமல் மறைந்து போனவர்கள் உண்டு.மாறாக நீங்கள் ஒரு பொறுப்பை அடைந்திருக்கிறீர்கள்.

ஒரு பொறுப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது என்றால் அதனை போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்குத்தான் இருக்கிறது. அப்படி பொறுப்பு கிடைத்தால் அது மிகமிக முக்கியமானது. பதவிகளுக்கோ, பொறுப்புகளுக்கோ வருவது முக்கியமல்ல,அதனை தக்க வைத்துக் கொள்வது தான் முக்கியமானது. உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான். பொறுப்புக்கு வந்த அனைவரும் அதைப் பொறுப்போடு பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கையெழுத்தின் வலிமையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தண்ணீரியின்றி தவிக்கும் ஒரு ஊரின் மக்களுக்கு நீங்கள் நிறைவேற்றித் தரும் திட்டத்தால் தாகம் தீர்க்க முடியுமானால், ஒழுங்கான சாலை இல்லாமல் தினந்தோறும் அவஸ்தைப்படும் மக்களுக்கு உங்களது ஒரு கையெழுத்தால் சாலை போட்டுத் தர முடியுமானால் நீங்கள் தான் மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள்.நோயால் துன்பப்படும் மக்களுக்கு உங்களது ஒரு கையெழுத்தால் ஒரு மருத்துவமனையை உருவாக்கித் தர முடியுமானால் நீங்கள்தான் மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள்.

ஒரு தூய்மையான, சுத்தமான ஒரு நகரத்தை உங்களால் உருவாக்க முடியுமானால் நீங்கள்தான் மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள். சாக்கடையோ, கழிவுநீரோ சாலையில் ஓடாமல் கால்வாயில் ஓடும் வாய்ப்பை உருவாக்கி சுகாதாரத்தைப் பேணுவதற்கு உங்களது கையெழுத்து உதவுமானால் நீங்கள்தான் மிகப்பெரிய சக்தி படைத்தவர்கள். இந்த சக்தி உங்கள் கையில் இருக்கிறது. இந்த சக்தியை மக்களுக்காகப் பயன்படுத்துங்கள்.மக்களுக்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.

ஓராண்டு காலத்தில் நான் இட்ட கையெழுத்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளியை உருவாக்கி இருக்கிறது, இருளை போக்கி இருக்கிறது,கவலையை கரைத்துள்ளது,கண்ணீரைத் துடைத்துள்ளது, நம்பிக்கையை விதைத்துள்ளது, நாளைய தினம் நன்றாக இருக்கும் என்ற தெம்பை வழங்கி இருக்கிறது. இப்படி கோடிக்கணக்கான தமிழக மக்கள் இந்த ஓராண்டு காலத்தில் நேரடியாகப் பயனடைந்துள்ளார்கள்.இதுதான் நம் கையில் இருக்கும் மாபெரும் சக்தி ஆகும்.

எத்தனையோ நல்ல பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன இந்த ஓராண்டு காலத்தில் இதுதான் நம் கையில் உள்ள சக்தி. இந்த சக்தி என்பது தானாக வந்துவிடவில்லை. முதலமைச்சர் என்ற சக்தியை உருவாக்கி என்னிடம் கொடுத்தவர்கள் மக்கள். அந்த சக்தியின் மூலமாக, பலத்தின் மூலமாக, அதிகாரத்தின் மூலமாக, பொறுப்பின் மூலமாக, ஒற்றைக் கையெழுத்தின் மூலமாக இந்த ஓராண்டு காலத்தில் இத்தகைய சாதனைகளை என்னால் செய்ய முடிந்தது.

போகுமிடமெல்லாம் என்னைப் பாராட்டுகிறார்கள், வரவேற்கிறார்கள், வாழ்த்துகளைக் கூறுகிறார்கள் என்றால் என்ன காரணம்?. மக்களுக்காக நன்மை செய்பவனாக நான் இருக்கிறேன் என்பதால்தான் பாராட்டுகிறார்கள். மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுபவனாக நான் இருக்கிறேன் என்பதால்தான் வரவேற்கிறார்கள். இத்தகைய பாராட்டும், வாழ்த்தும் நீங்களும் அடைய வேண்டும்.மக்களுக்கு உதவி செய்வதன் மூலமாக பாராட்டுகளை பெறுங்கள்”. எனக் கூறினார்.

error: Content is protected !!